நா. பார்த்தசாரதி 175
அவருடைய கேள்விக்கு ராஜாராமனால் பதில் ஒன்றும் சொல்ல முடியவில்லை. அன்று அவன் மதுரத்துக்கு ஒரு கடிதம் எழுதி அவரிடம் கொடுத்திருந்தான். அதில் அவள் செயலைப் பாராட்டி வியந்து எழுதியிருந்தான். என்றாலும், மனத்துக்குள் கவலையாகத்தான் இருந்தது.
அதற்குப்பின் மீண்டும் இரண்டு மாதங்கள் கழித்துப் பத்தர் மட்டும் தனியே அவர்களைப் பார்க்க வந்து விட்டுச் சென்றார். மதுரம் அவரிடம் நிறையத் தகவல்கள் சொல்லி அனுப்பியிருந்தாள். அவனும் பதிலுக்கு அவளிடம் சொல்லுமாறு நிறைய ஆறுதல் கூறி அனுப்பினான்.
முத்திருளப்பனும் அவனும் விடுதலை ஆவதற்கு ஒரு மாதத்திற்கு முன் மீண்டும் பத்தர் வந்தபோது ஆசிரம வேலை முடிந்து, பிருகதீஸ்வரன் ஹரிஜனக் குழந்தைகளுக்கு ஒரு பள்ளிக் கூடமும், சர்க்கா-நெசவுப் பிரிவும் அங்கே தொடங்கி விட்டதாகத் தெரிவித்தார். அன்றே அந்த விநாடியே ஆசிரமத்துக்குப் போய்ப் பார்க்க வேண்டும் போல் ஆசையாயிருந்தது அவர்களுக்கு. முத்திருளப்பனும் ராஜா ராமனும் அன்றிலிருந்து நாட்களை எண்ணினார்கள். கைதாகிய நாளிலிருந்து சரியாக ஒன்பதாவது மாதம் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். விடுதலையாகி மதுரை போய் அவன் மதுரத்தைக் காணச் சென்றபோது, அவள் வீட்டு முன் கூடத்தில் ஏற்கெனவே மாட்டியிருந்த நாகமங்கலத்தாரின் பெரிய படத்தருகே இப்போது தனபாக்கியத்தின் படமும் இணையாக மாட்டப் பட்டிருப்பதைக் கண்டான். மதுரத்துக்கு அவனைப் பார்த்ததும் அழுகை வெடித்துக் கொண்டு வந்தது. - . . . . .
'அம்மா போயிட்டா!' என்று சிறு குழந்தையாக அப்போது தான் புதிதாக அதை உணர்ந்தவள் போன்று அவனிடம் கதறினாள். மனம் திறந்து பிறக்கும் சோகம் இதயத்தைப் பகிர்ந்து கொண்டவர்களுக்கு முன் தவிர்க்கப் பட முடிவதில்லை என்பதை அவள் நிலையிலிருந்து அவன் நன்றாக உணர்ந்தான். முத்திருளப்பன் முறைப்படி அவளிடம்