நா. பார்த்தசாரதி 179.
பல்லாயிர மூழிகள் தொடர்ந்து
பாடிப் பசித்த குயிலின் குரல்..." 'பிரமாதமாக வந்திருக்கிறது! பசித்த குரல் என்று சொல்லியிருக்கிறீர்களே; அது என்னுடைய குரல்தான்...'
வீணை வாசித்தபின் - இந்தப் பாடலைத் தானே பாடிப் பார்க்கும் ஆசையை அவனிடம் வெளியிட்டாள் அவள்.
'உன் இஷ்டம். ஒருவேளை உன் குரலினிமையினால் இதுவும் ஒரு மகா காவியமாகி விடலாம். பாடேன், ! என்றான் ராஜாராமன். அவன் சொன்னதே பலித்தது. தன் குரலினிமையால் அந்தப் பாடலை அவள் ஒரு மகா காவியமாகவே ஆக்கிக் காட்டினாள். 'பாடிப் பசித்த குயிலின் குரல்' - என்று கடைசி வரியை அவள் முடித்தபோது - ஆத்மாவுக்கே பசிப்பது போல் ஒரு இனிய சோகத்தைப் பரவச் செய்தது அவள் சங்கீதம். அன்றே அந்தப் பாடலைத் தன் நாட்குறிப்பில் நினைவாக எழுதிக் கொண்டான் ராஜாராமன்.
மறுநாள் காலை அவனும், முத்திருளப்பனும் ஆசிரமத்துக்குச் சென்று பிருகதீஸ்வரனைச் சந்தித்தார்கள். அந்த மாந்தோப்பு இப்போது ஓரளவு மாறிக் காட்சியளித்தது. மாந்தோப்பை ஒட்டியிருந்த கிராமத்தார்களுக்குக்கூட, அங்கே யாரோ காந்திக்காரங்க பள்ளிக்கூடம் நடத்தறாங்க - என்பது போல் ஆசிரமத்தின் பெருமை பரவியிருந்தது. மாமரங்களின் இடையே பர்னசாலைகள் போல் கூரைச் சார்ப்புக்கள் தெரிந்தன. தாமரைக் குளத்தருகே மேடையில் பிருகதீஸ்வரன் மாணவர்களை அணிவகுக்கச் செய்து, 'வெள்ளைத் தாமரைப் பூவில் என்ற பாரதியின் பிரார்த்தனை கீதத்துடன் பிரேயர் வகுப்பைத் தொடங்கிக் கொண்டிருந்த போது அவர்கள் அங்கே போய்ச் சேர்ந்திருந்தார்கள். பிருகதீஸ்வரன் அவர்களை நெஞ்சாரத் தழுவி வரவேற்றார். மாணவர்களுக்கும் அறிமுகப்படுதினார்.