நா. பார்த்தசாரதி 211 பழைய படங்கள் எல்லாம் மாட்டப்பட்டிருந்தன. படுக்கையருகே ஒரு நீள பெஞ்சிலே அவள் வழக்கமாக நூற்கும் சர்க்கா வைக்கப்பட்டிருந்தது. படுக்கையின் கீழ் பேஸின், பழைய சட்டி ஒன்று எல்லாம் இருந்தன. அவள் வசிக்குமிடம் ஒரு தீவிர நோாயளியின் அறையாக மாறியிருந்தது.
பூஜை முடிந்து அவள் திரும்பிய போது கதவருகே நின்ற அவன் கண்களும், கருவட்டம் போட்டுக் குழிந்திருந்த அவள் கண்களும் சந்தித்துக் கொண்டன. மனத்தில் கனத்திருந்த உணர்ச்சிகளால் இருவருக்குமே ஒன்றும் பேச வரவில்லை. பவித்ரமான உணர்ச்சிகளுடன் மனிதர்கள் எதிரெதிரே சந்தித்துக் கொள்ளும்போது தங்கள் சேவை அநாவசியம் என்று கருதினாற்போல் வார்த்தைகள் அவர்களை விட்டுப் போயிருந்தன போலும், அவன் கண்களில் நீர் நெகிழ நிற்பதை அவள் பார்த்தாள். அவள் கண்களிலும் ஈரம் பளபளத்தது.
காற்றில் ஒடிந்து விழுவது போலிருந்த அவள் சரீரம் ஒரு நூல் அசைவது போல் அசைந்து அவனருகே வந்தது. கீழே. குனிந்து அவன் பாதங்களைத் தொட்டுக் கண்களில் ஒற்றிக் கொண்டாள் அவள். பூஜை செய்த அவள் வலதுகை ஈரத்தில் ஒரே ஒரு ரோஜா இதழ் ஒட்டிக் கொண்டிருந்தது. அந்த ஒற்றை ரோஜா இதழை அவன் பாதங்களில் அவள் உதிர்த்தாள். சூடான இரண்டு துளிக் கண்ணிரும் ஒரு ரோஜா இதழும் அவன் பாதங்களில் அர்ச்சிக்கப்பட்டன.
மேலே நிமிர்ந்த அவள் நெற்றியில் அவன் கண்ணிர்
உதிர்ந்து சுட்டது. உணர்வுகள் அவன் இதயத்தைப் பிசைந்தன. -
'மதுரம்...' இதயத்தின் ஆழத்திலிருந்து பிறந்த ஒரே ஒரு வார்த்தை மட்டும் அவன் வாயிலிருந்து வெளிப் பட்டது. அவள், இளைத்துக் கறுத்துத் தாடியும் மீசையுமாக அவன் இருந்த நிலை கண்டு கண் கலங்கினாள்.