பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/222

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220 ஆத்மாவின் ராகங்கள்

'அப்படி ஒண்ணுமில்லே! சுபாஷ் சந்திர போஸுக்கு மூக்கு கொஞ்சம் சப்பை. உங்களுக்கு அழகான கூர்மூக்கு. நீங்க அவரைவிட உயரம். அவரைவிடச் சிவப்பு! நீங்க மூக்குக் கண்ணாடி போட்டுக்கலே.'

‘'நீ அப்படி நினைக்கிறே! ஆனா, நான் பார்த்த தலைவர்களில் தெய்வீகமானவர் மகாத்மா, நளினமானவர் ஜவஹர்லால் நேரு, கம்பீரமானவர் சுபாஷ் சந்திரபோஸ். அவருக்கு இணையான கம்பீர புருஷனை இந்தியத் தலைவர்களில் நான் இன்னும் பார்க்கலை...'

'நீங்க இருக்கேளே...'

'நான் தலைவன் இல்லையே; சாதாரண தேசத் தொண்டன். மகாத்மாவின் பல்லாயிரம் பக்தர்களின் ஒரு பக்தன்.'

'எனக்கு நீங்கதான் தலைவர் நான் உங்களைத்தான் பக்தி செய்கிறேன்...'

அவனால் ஒன்றும் பதில் சொல்ல முடியவில்லை. பிரியம் என்ற மழையில் நனைந்து, பேசச் சக்தியற்றுப் போயிருந்தான் அவன்.

'நான் எப்போதோ செத்துத் தொலைந்திருக்கணும். அம்மா போயிட்டா, பத்தர் போயிட்டார். மாமா, மங்கம்மா எல்லாரும் போயிட்டாங்க. இந்த உயிர் மட்டும் உங்களுக்காக இன்னும் உடம்பிலே ஊசலாடிண் டிருக்குங்கிறதாவது உங்களுக்குப் புரியறதா?' கண்களில் நீர் நெகிழ அவனைக் கேட்டாள் அவள். பதில் சொற்களாக வெளிவருவதற்குப் பதில் அவன் கண்களிலும் நீராக நெகிழ்ந்தது. பல சமயங்களில் வார்த்தைகளை விடக் கண்ணிர்தான் அன்பின் சத்தியமான சாட்சியாயிருக்கிற தென்பதற்கு அவர்கள் அப்போது நிதரிசனமாயிருந்தார்கள்.