பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/224

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


222 ஆத்மாவின் ராகங்கள்

திருந்தாலும் மாலை வெயிலில் அது மிக மிக அழகா யிருந்தது. பறவைகளின் சப்தங்கள், அருவி விழும் ஒசை, கிழிப்பது போல் ஒசையுடன் அடிக்கும் மலைக்கணவாய்க் காற்று, எல்லாமே செவிக்கு இன்பமாக இருந்தன. மாந்தோப்பில் எங்கிருந்தோ ஒரு குயில் விட்டு விட்டுக் கூவியது. ராஜாராமன் கூட நடந்து வந்து கொண்டிருந்த மதுரத்தின் பக்கம் திரும்பி

'உலகத்தில் இன்னொரு குயிலும் இருக்கிறது மதுரம். நான் நீ மட்டும் தான் இருக்கிறாய் என்று இதுவரை நினைத்துக் கொண்டிருந்தேன்' என்றான்.

'இருக்கலாம்! நீங்க பாடியிருக்கேளே, 'பல்லாயிரம் ஊழிகள் பாடிப் பசித்த குயில்னு அந்தக் குயில் என்னைத் தவிர வேறே எங்கேயும் இருக்க முடியாது.'

அந்தப் பாடலை அவள் மறக்காமல் நினைவு வைத்துக் கொண்டிருந்தது அவனுக்கு ஆச்சரியமாயிருந்தது.

'அந்தப் பாட்டு உனக்கு இன்னும் நினைவிருக்கா?"

'உங்களுக்கு மறந்துட்டாலும் எனக்கு மறக்காது. அப்படி மனப்பாடம் பண்ணியிருக்கேன். '

வீடு திரும்பியதும் அவன் கேட்காமல் அவளாகவே அந்தப் பாட்டைப் பாடினாள். பாடினாள் என்பதைவிட நெஞ்சில் இழைத்து இழைத்து உருகினாள் என்றுதான் தோன்றியது. ராஜாராமனுக்கு நீண்ட நாட்களுக்குப்பின் அவள் தன் ஆத்மாவில் ஊடுருவிப் பதிவதுபோல் பாடவே அவன் மெய்மறந்து போனான். அந்த உடல் நிலையில் அவள் பாடக் கூடாது என்பது அவனுக்கும் நினைவில்லை. டாக்டரின் கடுமையான எச்சரிக்கைகள் அந்த உணர்ச்சிமயமான வேளையில் அவளுக்கும் நினைவில்லை. ஆத்மாவோடு ஆத்மாவாக உறைந்து போன அன்பு பெருக்கெடுத்து அதுவே சங்கீதமாக நிறைந்து வழிந்தாற் போல் பாடினாள் மதுரம். -