பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 223

எல்லையில்லாததோர் காட்டிடை - நள்

இருளென்றும் ஒளியென்றும் சொல்ல ஒணாததோர் மயக்கத்தே. இளம் சோகக் குயில் ஒன்றிசைக்கிறது. அதன் சோகம் முழுதும் தெரியுதிலை

சுவடு முழுதும் புரியுதிலை

பாட்டு நடுவே தடைப்பட்டது. அவள் பயங்கரமாக இருமத் தொடங்கினாள். முகம் குப்பென்று வியர்த்தது. கண்கள் சொருகிக் கொண்டு போயின. ராஜாராமன் பயந்து போனான். வீணையை அவள் மடியிலிருந்து எடுத்தான். அவளைப் படுக்க வைத்தபோது கண்களை முழித்து முழித்து அவனைப் பார்த்தாள். பேஸினில் கோழையைத் தாங்கினான் அவன். கோழையைத் துப்பி முடித்ததுமே

'இப்போதாவது என் சோகம் முழுவதும் புரிகிறதா? என் சோகத்தின் சுவடு முழுவதும் தெரிகிறதா?' குரல் நலிந்து போய் அவனைக் கேட்டாள் அவள். மறுபடியும் இருமல் குத்திப் பிடுங்கியது. பேஸினில் மறுபடி ஒரு கொத்துக் கோழை செம்பருத்திப் பூவாக வந்து விழுந்தது. ராஜாராமன் பயந்துபோய் சமையற்காரனைக் கூப்பிட்டு உடனே ஜமீன்தாரிணிக்கு ஆளனுப்பச் சொன்னான்.

டாக்டரைக் கூப்பிட்டுக் கொண்டு வரவும் சொல்லியனுப்பினான். மதுரையிலிருந்து வரும் பெரிய டாக்டரைக் கூப்பிட்டுக் கொண்டு வருவது என்பது அந்த நேரத்திற்கு மேல் உடனே சாத்தியமில்லை. நாகமங்கலத்தில் லோகல் பண்டு ஆஸ்பத்திரியில் ஒரு வயதான எல்.எம்.பி. டாக்டர் உண்டு. அவரைக் கூப்பிட்டுக் கொண்டு வரச் சொல்லி சமையற்காரன் ஆளனுப்பினான். மதுரம் பரக்கப் பரக்க விழித்தாள். வாய் கோணிக் கோணி வலித்துக் கொண்டு போயிற்று. அரண்மனையிலிருந்த ஒரு பழைய ஃபோர்டு காரில் ஜமீன்தாரிணி அம்மாளும், எல்.எம்.பி, டாக்டரும் விரைந்து வந்தார்கள். ஜமீன்தாரிணி ஒன்றும் புரியாமல் பெரிதாக வாய்விட்டு அழத் தொடங்கி விட்டாள்.