நா. பார்த்தசாரதி 239
சுதந்திர தினத்தன்று தன்னுடைய பழைய விரதம் ராஜாராமனுக்கு நினைவு வந்தது. பதினெட்டு வருஷங்களுக்கு முன் இளமை ஆவேசத்தோடு மீனாட்சி யம்மன் சந்நிதிக்கு முன்னால் அவனும், நண்பர்களும் செய்து கொண்ட அந்தச் சத்தியம் அவனைப் பொறுத்த வரையில் இன்னும் தொடரவே செய்தது. தேசம் சுதந்திரம் அடைகிறவரை திருமணமே செய்து கொள்வதில்லை என்று அன்று எடுத்துக் கொண்ட விரதத்தை மற்றவர்கள் இனிமேல் கைவிடலாம்; கைவிட முடியும். ஆனால் அவனோ, அந்த விரதத்தை இனியும் கைவிட முடியாமலே போய்விட்டது. எந்த மகத்தான காரணத்துக்காக அவர்கள் எல்லாம் வீடு வாசலைத் துறந்து, சுகங்களையும் பந்தபாசங்களையும் விடுத்து நோன்பு இயற்றினார்களோ, அந்த நோன்புக்குப் பயன் கிடைத்துவிட்டது. ஆனால், அவனுடைய நோன்பு பலித்த வேளையில், அவனுக்காக அல்லும் பகலும் நோன்பிருந்து, "ராமா உன்னைப் பக்தி செய்யும் மார்க்கம் தெரியவில்லையே' என்று மொழியாலும், வீணையாலும் கதறியவள் யாரோ, அவளுடைய நோன்பு பலிக்காமலே தனிப்பட்டவர்களின் விரதங்கள் அந்தத் தியாக வேள்வியில் எரிந்து போயின. தேசபக்தர்களின் மகாவிரதம் பலித்து விட்டது. காந்தி என்ற சத்தியாக்கிரக மகாமுனிவரின் தவம் சித்தி பெற்று விட்டது. அந்த மகா விரதத்தில் எத்தனையோ அல்பமான விருப்பங்களும், தனிப்பட்டவர்களின் அபிலாகைrகளும், குடும்பங்களின் சுகங்களும் அழிந்து போயிருக்கலாம். ஆனால், பனி உருகி இமயம் அழியாது என்றாலும், கங்கை பிறக்கும். தேசபக்தி இம்யத்தைப் போன்றதென்றால் சுதந்திரம் கங்கையைப் போன்றது. ராஜா ராமனைப்போல் பலருடைய பொன்னான வாலிபத்தைக் காந்தி என்ற மகாமுனிவர் தம்முடைய பணிக்காக வாங்கிக் கொண்டார். அதனால் ராஜாராமன் பெருமைப்படலாம். ஆனால், அவனுடைய தியாகத்தில் அவனுக்காகத் தியாகங்களைச் செய்தவளுடைய தியாகமும் கலந்துதான் இருக்கிறது. அது தனித் தியாகம் இல்லை. வாழ்வில் கலக்க முடியாதவர்கள் தியாகங்களில் கலந்து விட்டார்கள். நான்