பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/247

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நா. பார்த்தசாரதி 245

சபைக்கும் ஒற்றுமையின்றி முரண்பாடுகள் வருமோ என எல்லோரும் வருந்தினார்கள்.

நாஸிக் காங்கிரஸ் முடிந்து அவன் திரும்பியபோது மற்றவர்களோடு மதுரை போகாமல் புதுக்கோட்டை போய்ப் பிருகதீஸ்வரனைப் பார்க்கக் கருதித் திருச்சியிலேயே இறங்கினான் அவன். திரும்பும்போது அப்படி வந்து திரும்புவதாக முன்பே அவருக்கு எழுதியிருந்தான்.

ரயிலிலிருந்து திருச்சியில் இறங்கியதுமே பேரிடிபோல் அந்தச் செய்தி அவனுக்குத் தெரியவந்தது. பிருகதீஸ்வரன் காலமாகிவிட்டார் என்று தெரிவிக்கப்பட்டபோது அந்தச் செய்தியை அவனால் நம்ப முடியவில்லை. இது தாங்கிக் கொள்ள முடியாத அதிர்ச்சியாயிருந்தது அவனுக்கு. அரசியலில் தன் ஆத்மார்த்தமான குருவையும் நண்பரையும் சேர்த்து ஒரே சமயத்தில் இழந்துவிட்டது போல் வேதனையை உணர்ந்து தவித்தது அவன் உள்ளம். அவன் புதுக்கோட்டைக்கு விரைந்தான். அந்தக் குடும்பத்தினருக்குப் பிருகதீஸ்வரனின் மறைவு மிகப் பெரிய அதிர்ச்சி யாயிருந்தது. மங்கலமான தோற்றத்தையுடைய பிருகதீஸ் வரனின் மனைவியைச் சுமங்கலிக் கோலத்தில் பார்த்துப் பார்த்துப் பழகியிருந்த அவன் கண்கள், இந்தப் புதிய கோலத்தைப் பார்த்து அதை ஏற்க முடியாமல் தயங்கின. பிருகதீஸ்வரனின் மனைவி வகையில் தமையன்மார்கள், தம்பிமார்கள் வசதியானவர்களாக இருந்ததால் அந்தக் குடும்பம் எதிர்காலத்தை மானமாகக் கழிப்பதில் சிரமப்படாது என்று தோன்றியது. உடன் பிறந்தவர்கள் அனைவருமே அந்த அம்மாளுக்கு ஆறுதலாக அப்போது புதுக்கோட்டையில் வந்து தங்கியிருந்தார்கள். ராஜாராமனைப் பார்த்ததுமே மாமி பொறுக்க முடியாமல் அழுதுவிட்டாள். அவள் மதுரத்துக்காக மதுரையில் வந்து துணையிருந்ததை எல்லாம் நினைத்தான் அவன்.

'உன் மேலே கொள்ளைப்பிரியம் அவருக்கு. சதா ராஜா, ராஜா ன்னு உன்னைப்பத்தியே சொல்லிண்டிருப்பார். நீ