பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/250

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248 ஆத்மாவின் ராகங்கள் மாகாணங்கள் பிரிந்தன. ஒவ்வொரு பிரதேச மொழியும் வளர வாய்ப்பளிக்கும் நல்லெண்ணத்தோடு இது செய்யப்பட்டது. பரிபூரணமாக குடியரசு அந்தஸ்துப் பெற்றுவிட்ட இந்தியாவில் வெளிநாட்டு உறவுப் பிரச்னையில் காஷ்மீரும், உள் நாட்டு உறவு நிலைகளில் மொழியும் நிரந்தரமான தடைகளாக நின்றன. செப்புமொழி பதினெட்டு இருந்தாலும் சிந்தனை ஒன்றே - என்று பல ஆண்டுகளுக்கு முன் பாரதி பாடி வைத்த ஒற்றுமை மெல்ல மெல்லப் போய் எத்தனை மொழிகள் உண்டோ அத்தனைக் கும் அதிகமான வேற்றுமைகளும், வெறுப்புகளும் பிடிவாதங்களும் பெருகின.

1959 -ல் காந்திராமன் தலைமையில் ரூரல் எஜுகேஷன் ஸ்டடி மிஷன் ஒன்றை இந்திய அரசாங்கம் ஐரோப்பாவுக் கும் அமெரிக்காவுக்கும் அனுப்பியிருந்தது. இந்தப் பிரயாணத்தின்போது காந்திராமன் மிகவும் உற்சாக மாயிருந்தார். வெளிநாடுகளின் பொருளாதார வளர்ச்சியையும், விஞ்ஞான வேகத்தையும் பார்க்கப் பார்க்க, இந்தியா இப்படி வளர்வது என்றைக்கு என்னும் நியாய மான கவலை அவர் மனத்தில் பிறந்தது. ஸ்விட்ஸர் லாந்திலும், ஜெனிவாவிலும் இருந்தபோது மகாத்மா ரோமன் ரோலந்தைச் சந்தித்துப் பேசிய பழைய நிகழ்ச்சிளை அங்குள்ள சில முதியவர்கள் தம்மிடம் சொல்லக் கேட்டு, மனம் நெகிழ்ந்தார் அவர். அந்தப் பிரயாணம் முடிந்து திரும்பியதும் டில்லியில் ஒரு மாதம் தங்கி எல்லாத் தலைவர்களையும் சந்தித்துப் பேசினார் அவர். நாட்டுப் புறங்களில் கல்வி வளர்ச்சிக்கும் தொழில் வளர்ச்சிக்கும் செய்ய வேண்டிய உடனடியான காரியங்கள் பற்றி நூற்றைம்பது பக்கங்கள் கொண்ட அறிக்கை ஒன்றை அவர் கல்வி மந்திரியிடம் சமர்ப்பித்தார். சென்னையிலும் மதுரையிலும் அவருக்குப் பெரிய வரவேற்பு அளிக்கப் பட்டது. நாட்டைப் பற்றிய தன் எதிர்காலக் கவலைகளை அவர் அந்த வரவேற்புக்களில் மனம் திறந்து பேசினார். மகாத்மாவுக்குப் பின்பு ஆன்ம பலத்திலும் சத்தியத்திலும், தொண்டு செய்வதிலும் கவலையுள்ள ஒரே பெரியவராக