பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 ஆத்மாவின் ராகங்கள் படிப்பதற்காக விரித்துப் பிடிக்கப்பட்ட போது எல்லோருடைய கண்களும் அவன் முகத்தையே பார்த்தன. பெண்மையின் வசீகரச் சாயலும், ஆண்மையின் எடுப்பும் கலந்திருந்த அந்த முகத்தில் கலக்கம் நிழலிட்டிருந்தது. சென்னையில் 1930-ம் ஆண்டு மே மாதம் ஆறாந்தேதி வெளியிடப்பட்டு மறுநாள் ஏழாந்தேதி மதுரைக்குக் கிடைத்திருந்த பேப்பர் அது. ராஜாராமன் பேப்பரைப் படிப்பதற்கு முன், -

'உனக்குத் தெரியுமா, ராஜா? புரொபஸர் சாமுவேல் கடைசியில் அந்தப் பக்கிரிசாமியை மதம் மாற்றி விட்டார். நேற்றிலிருந்து காலேஜ் அட்டெண்டன்ஸ் ரிஜிஸ்டரில் கூட அவன் பெயரை ஜான் பக்கிரிசாமி என்று மாற்றி எழுதியாச்சாம்!' - என்று உள்ளுர் மிஷன் கல்லூரி ஒன்றில் நடந்த நிகழ்ச்சி ஒன்றைப்பற்றிச் சுற்றிலும் அமர்ந்திருந்த இளைஞர்களில் ஒருவன் பிரஸ்தாபித்தபோது, அதைக் கேட்டு ராஜாராமனுக்குக் கோபமே வந்து விட்டது.

'காலேஜைப் பற்றியும், வெள்ளைக்காரனுக்குத் துதிபாடும் அந்தச் சாமுவேல் வாத்தியாரைப் பற்றியும் இங்கே பேசாதேன்னு உனக்கு எத்தனை தடவை சொல்றது? இந்த தேசத்தில் இந்தத் தலைமுறையில் ஒரே ஒரு மதமாற்றம் தான் உடனடியா நடக்கணும். ஜனங்களை அடிமைத் தனத்திலிருந்து சுதந்திரத்திற்கு மதம் மாற்றியாக வேண்டும். அதைக் காந்தி மகான் செய்து கொண்டிருக்கிறார். பாவிகள் அது பொறுக்காமல், முந்தாநாள் அவரைக் கைது செய்திருக்கிறார்கள். விசாரணையே இல்லாமல் சிறைத் தண்டனையும் கொடுத்திருக்கிறார்கள்!' - கூறிவிட்டுச் 'சுதேசமித்திரனையும் படித்துக் காட்டிய போது, உயிர்க்களை ததும்பும் ராஜாராமனின் ஜீவன் நிறைந்த விழிகளில் சத்தியாவேசம் ஒளிர்ந்தது. 'சுதேசமித்திரனைப் பிடித்திருந்த அவன் கைகள் குங்குமமாகச் சிவந்திருந்தன. கூரிய நாசிக்குக் கீழே சிவந்த அழுத்தமான உதடுகள் அவன் எதையும் சாதிக்கக்கூடியவன் என்ற திடசித்தத்தைக் காட்டின. -