பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/265

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 263

நான்கு மாதங்களுக்குப் பின் இந்தக் கதையின் அச்சான முதற் பிரதியோடு மீண்டும் ஆசிரமத்திற்குச் சென்றேன். "ஆத்மாவின் ராகங்கள் முதற் பிரதியைப் பெரியவர் காந்திராமனின் அறையில், மதுரத்தின் அந்த வீணை யருகே கொண்டு போய் வைத்தாலே அதை அவரிடம் சமர்ப்பிப்பதாக எனக்குள் ஒரு பாவனை தோன்றியது. அவ்வாறு செய்ய விரும்பினேன் நான்.

அப்படியே செய்தபோது அந்த வீணையில் மோனமாக உறைந்து கிடந்த ராகங்கள் எல்லாம் என் செவிகளில் கிளர்ந்து வந்து ஒலிப்பதாக நான் உணர்ந்தேன். வாசிக்கப் படாது எஞ்சிய ராகங்கள் பலவற்றைக் கேட்கும் புதுமையான அநுபவமாயிருந்தது அது. யாருடைய ஆத்மாவின் ராகங்கள் கதையில் சொல்லப்பட்டிருந்தனவோ அவளிடமும் அவரிடமுமே அந்தப் புத்தகத்தைச் சேர்த்துவிட்ட திருப்தி அப்போது எனக்கு ஏற்பட்டது. ஆத்மாவின் ராகங்கள் உறைந்து கிடக்கும் அந்த வாத்தியத்தோடு புத்தகமும் சேர்ந்து தென்படுவதை என் விழிகள் நீண்ட நேரம் இமையாமல் பார்த்துக் கொண்டேயிருந்தன. கண்களில் நீர் நெகிழ்ந்தது.

- (முற்றும்)