பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/40

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


38 ஆத்மாவின் ராகங்கள்

விடலாமென்று கூறப்பட்டது. இருவருமே கைதாவதை விட, யாராவது ஒருவர் வெளியே இருப்பது சில காரியங்களைச் செய்ய வசதியாயிருக்கும் என்று தோன்றியது. ராஜா ராமனைப் பொறுத்தவரை அவன் நிச்சயமாகவே சிறை வாசம் அனுபவிக்க விரும்பினான்.

'இந்தத் தண்டனையை இன்று அடைய முடிந்தவன் படமுடிகிற பெருமிதத்தைத் தேசத்தில் இனி வரும் எந்தத் தலைமுறையிலும் எந்தத் தண்டனையாலும், எவனாலும் அடைய முடியாது, ' என்று அவன் அடிக்கடி கூறுவதுண்டு. சீட்டுக் குலுக்கிப் போட்டுப் பார்த்ததில், குருசாமியின் பெயர் விழுந்தது. முத்திருளப்பன் வெளியே இருந்து வாசக சாலையையும், மற்றக் காரியங்களையும் கவனித்துக் கொள்ளுமாறு வேண்டப்பட்டது. சிறை செல்ல முடியவில்லையே என்ற வருத்தத்தோடு தான் முத்திருளப்பனும் அதற்கு இணங்க வேண்டியதாயிற்று. நண்பர்கள் மீண்டும் 'வந்தே மாதர முழக்கத்தோடு பிரியும்போது நள்ளிரவுக்கு மேலாகிவிட்டது. எல்லாரும் அவரவர் வீடுகளுக்குப் போய்விட்டார்கள். ராஜாராமன் மட்டும் வாசகசாலைக்கு வந்து மொட்டை மாடியில் பாயை விரித்துப் படுத்துக் கொண்டான். மறியலுக்குக் குறித்திருந்த தேதிக்கு இன்னும் இரண்டு மூன்று நாட்களே இருந்தன. அதற்குச் செய்ய வேண்டிய காரியங்களை நினைவு படுத்திக் கொண்டான் அவன். ரொம்ப நேரமாகத் தூக்கம் வரவில்லை. அதிகாலையில் தான் கொஞ்சம் கண்ணயர முடிந்தது. அன்று மிக அதிகாலையிலேயே எழுந்திருந்து மேலூருக்குப் போய்வர எண்ணியிருந்தான் அவன். கைதாகி ஜெயிலுக்குப் போவதானால் அம்மாவுக்கு வந்து சேர வேண்டிய குத்தகைப் பணம் தடைப்படும்படி நேரவிட அவன் விரும்பவில்லை. அவன் கைதாவதோ, மற்ற விவரங்களோ அம்மாவுக்குத் தெரியாது. குத்தகைக் காரனிடம், அப்பப்போ பணத்தை மதுரைக்குக் கொண்டு வந்து கொடுத்துடு, நான் கொஞ்ச நாள் ஊரிலிருக்க மாட்டேன் - என்று சொன்னாலே போதும். *