பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 53 விசாரணைக்குப் பின்பு அவன் மட்டும் வேலூருக்குக் கொண்டு போகப்பட்டான். நண்பர்களை என்ன செய்யப் போகிறார்கள்; எங்கே கொண்டு போகப் போகிறார்கள் என்பதை அவனால் அறிய முடியவில்லை. மதுரை ரயில்வே பிளாட்பாரத்தில், மேற்கே சூரியன் மறையும் காட்சியைப் பார்த்துக் கொண்டே விலங்கிட்ட கைகளுடன் அவன் ரயிலேற்றப்பட்டபோது ரத்தினவேல் பத்தர் கண்களில் தென்பட்டார். செய்தியைக் கேள்விப்பட்டு அவனைப் பார்க்கத்தான் அவர் வந்திருக்க வேண்டும். ஆனால், அவரோடு அவன் எதுவும் பேச முடியவில்லை. ஜாடை காட்ட முயன்றும், அதைச் செய்ய முடியாமல் கூட்டம் அவருக்கு அவனையும் அவனுக்கு அவரையும் மறைத்துவிட்டது. பரஸ்பரம் பார்த்துக் கொள்ள மட்டும் முடிந்தது. மனத்தில் என்னென்னவோ அலை மோதிற்று.

ரயில் வைகைப் பாலம் தாண்டிய போது ஊரும், கோபுரங்களும் மாலை இருளில் மங்கலாகத் தெரிந்தன. திண்டுக்கல்லில் ஏதோ சாப்பிட வாங்கிக் கொடுத்தார்கள். வலது கையை மட்டும் கழற்றிவிட்டு, இடது கையைத் தன் கையோடு பிணைத்து விலங்கைப் பூட்டிக் கொண்டுதான் ராஜாராமனைச் சாப்பிட அனுமதித்தான் போலீஸ்காரன். அன்று முழுவதும் வீட்டில் அம்மா சாப்பிட்டிருக்க மாட்டாள் என்று ஞாபகம் வந்தது. அவளுக்கு எப்படியும் இரவுக்குள் பத்தர் போய்ச் சொல்லிவிடுவார்.அவள் என்னென்ன உணர்ச்சிகளை அடைவாள் என்பதை அவனால் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியவில்லை. தோள்பட்டையில் அடி விழுந்த இடத்தில் வலித்தது. உருட்டிய கவளத்தை வாய் வரை உயர்த்திப் போட்டுக் கொள்ளக் கூட முடியாமல் வலித்தது. அடிபட்ட இடத்தில்

பெரிய நெல்லிக்காயளவு வீங்கி இருந்தது. -

ராஜாராமன் மறுநாள் வேலூர் சிறையில் சி வகுப்புக் கைதியாக நுழைந்தான். அரசியல் கைதிகளுக்கு பி வகுப்புத் தருவார்கள் என்று எங்கோ யாரோ சொல்லியிருந்தார்கள். மதுரை போலீஸ் என்ன சார்ஜ் எழுதி அனுப்பியிருந்ததோ,