பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 57 அர்த்தத்தைப் பிருகதீஸ்வரன் விளக்கியபோது அவன் பிரமிப்பு அடைந்தான். 'இயக்கம்' என்ற சாதாரண வார்த்தையை விடப் பொருளாழம் உள்ளதாயிருந்தது அது.

சிறையில் அவர்களுக்கு அளிக்கப்பட்ட உணவு மிகமிக மோசமாயிருந்தது. ஒரு நாள் பிருகதீஸ்வரனுக்கு அளிக்கப்பட்ட கேழ்வரகுக் களியிலிருந்து ஒரு கரப்பான் பூச்சியை எடுத்துக் காட்டிவிட்டு அந்தக் களியை உண்ணாமல் மூலையில் ஒதுக்கி வைத்தார் அவர். வேறு சத்தியாக்கிரகிகளில் சிலர் வயிற்றுப் போக்காலும் சிலர் வாந்தியாலும் வேதனைப்பட்டார்கள். எல்லாவித வகுப்புக் கைதிகளும் சேர்ந்து தங்கள் உணவுக்கான சாமான்களைக் கொடுத்துவிட்டால் தாங்களே உணவு தயாரித்துப் பரிமாறிக் கொள்வதாக விடுத்த வேண்டுகோளைச் சிறை நிர்வாகம் ஏற்றது. பிருகதீஸ்வரனுக்கு நன்றாகச் சமைக்கத் தெரியும். சமையல் பொறுப்பை அவர் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டார். அவருக்கான உதவிகளைச் செய்வதில் ராஜாராமன் முன் நின்றான். வித்தியாசம் பாராமல் பெரிய பெரிய தலைவர்கள் எல்லாரும் பந்தியில் அமர்ந்து சாப்பிட்டதைக் கண்டு அவனும் பிருகதீஸ்வரனும் மிகவும் திருப்தியடைந்தார்கள். சில சத்தியாக்கிரகிகள் உணவுப் பந்தியில் பிரார்த்தனைக் கீதங்களைப் பாடினார்கள். வேறு சிலர் பாரதியாருடைய இதந்தரு மனையின் நீங்கி - என்று தொடங்கும் சுதந்திரதேவி துதியை இனிய எடுப்பான குரலில் பாடினார்கள். நியாயமான காரணத்துக்காகப் போராடிச் சிறை புகுந்திருக்கிறோம் என்ற சத்திய ஆவசேம் அங்கு எல்லாருக்கும் இருப்பதைப் பார்த்தபோது அவனுக்கு அது தனிப் பெருமிதத்தை அளித்தது. சிறைச்சாலை தவச் சாலையைப் போலிருந்தது.

பேட்டை முத்துரங்க முதலியாரின் நாலாயிர திவ்யப் பிரபந்த ஆராய்ச்சியும், பிருகதீஸ்வரனின் கீதை வகுப்பும், ராஜாராம்ன் தானே விரும்பி நடத்திய பாரதி பாடல் வகுப்பும் மாலை வேளைகளில் சத்தியாக்கிரகிகளை உற்சாகப் படுத்தின. 'வந்தே மாதரம் என்போம் - எங்கள்