பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11 ஒரளவு வழிகாட்டிகளாகக் கொண்டு முன்னேறினேன். நான் வழுக்கி விழுந்த இடங்கள் பல. வலிய வீழ்த்தப்பட்ட இடங் களும் சில. அண்ணாந்து நோக்கிச் சிறிது சிறிதாக வளைந்து மேலேறும் புகைவண்டியைப் போலவே சில நாட்களில் மேலே றியதும் உண்டு. இப்படி இன்று இந்த உதகையின் உச்சியில் நிற்பது போன்று வாழ்வில் ஒரளவு முன்னேறினேன் என்று சொல்லலாம். அம்முன்னேற்றத்திற்குக் காரணமாயிருந்த அனைவரையும் வாழ்த்துகிறேன். இவ்வாறு என் கடந்தகால நிகழ்ச்சிகளை எண்ணும்போது முதலில் என் இளமையின் செயல்களும் அவற்றின் வழிச் சிந்தையில் எழுந்த நினைவு களும் முன் நிற்கின்றன; கல்லா இளமையில் ஒவ்வொருவரும் எத்தனை எத்தனையோ இன்ப துன்பங்களை அனுபவித் திருப்பர். என் இளமையிலும் நான் பெற்ற இன்ப துன்பங் கள் பல. அக்காலத்தில் அவற்றைப் பற்றி ஆழ்ந்து சிந்திக்கும் ஆற்றல் ஏது? எனவே அன்று அனுபவித்த அத்தனையும் விளையாட்டுச் செயல்களாகவே கழிந்தொழிந்தன. இன்று அந்த இளமை எண்ணங்கள் உள்ளத்து எழும்போது ஒவ்வொன்றிலும் பொதிந்துள்ள உண்மைகளும் கருத்துக் களும் அவற்றின் வழி நான் மட்டுமன்றி மனித இனமே அறிந்து செல்லக் கூடிய வழிதுறைகளும் அவற்றைக் காட்டும் அறநெறிகளும் உடன் தோன்றுகின்றன. சிறுசிறு செயல்களும் சிந்தையைத் துலக்கும் ஒளி விளக்கங்களாக அமைந்துள்ளன என்னலாம். ஆயினும் அவற்றையெல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக வரிசைப்படுத்தி வகையாக ஒரு வரலாற்றை எழுத நான் முன்வரவில்லை. அது விரிவாகச் செல்வதாக அமைவ தன்றிப் பலருக்கும் வேண்டாததாகவும் ஆகும். எனவே இங்கு என் உள்ளத்தில் தோன்றுவனவற்றுள் ஒரு சிலவற்றை மட்டும் எடுத்துக்காட்ட எண்ணுகிறேன். நான் உதகையில் ஒரு திங்கள் தங்கினேன். என் அறை யின் உள்ளிருந்து நேர் நோக்கின் எதிரில் நாளும் இவ்வுயரிய சிகரம் தோன்றிக் கொண்டுதான் இருக்கும். அதைச் சென்று காணவேண்டும் என்று நான் முதலில் நினைக்கவில்லை. சுற்றித் தோன்றும் பல குன்றுகளில் இதுவும் ஒன்று என எண்ணினேன். எனினும் சிலநாளில் அக்குன்றின் பெயர் என்ன என்றும் அதுவே அப்பகுதியில் உயரிய குன்று என்றும், அது பல இயற்கைச் சூழல்களைக் கொண்டுள்ளது என்றும் அதைக் காண் வேண்டுமென்றும் என் நண்பர்கள் கூறினர். பிறகு தான் அக்குன்றினைச் சென்று காணவேண்டும் என்ற கருத்து