பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/348

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

348 - ஆனந்த முதல் ஆனந்த வரை நான் ஐதராபாத்தில் இருந்தபோது மற்றொரு புதுப்பணி வந்து சேர்ந்தது. பூனாவிலிருந்து ஒரு கடிதம் சென்னைப் பச்சையப்பர் முகவரிக்கு அனுப்பப்பெற்று, என் ஐதராபாத் முகவரிக்குத் திருப்பி அனுப்பப் பெற்றது. பிரித்துப் பார்த்தேன். மராட்டிய மாநிலத்துப் பள்ளி இறுதித் தேர்வு, இடைநிலைத் தேர்வு ஆகியவற்றில் தமிழில் வினாத் தயாரிக்கும் பணியில் சிறப்பு மேற்பார்வையாளராக இருக்கு மாறுவேண்டி இருந்தது. அது எனக்குப் புதியது ஆனமையின் வேண்டாமென மறுக்க எண்ணினேன். பின் அதனுடன் வந்த குறிப்பினைப் பார்த்தபோது. அங்கு வாழும் தமிழ் மக்கள் தமிழைக் கட்டாயம் எழுத வேண்டியநிலையில் உயர் மட்டம், கீழ்மட்டம் என்ற இருவகை நிலையில் வினாத் தாள்கள் அமைய வேண்டும் எனவும், வேற்று மொழியை முக்கியமாகக் கொள்ளின் கீழ்மட்டத்தினையும் அல்லார் உயர் மட்டத்தினையும் கொள்ள வேண்டும் என இருந்தது. தமிழ் நாட்டிலேயே இந்த நிலை இல்லாதபோது, அந்நிய மாநிலத்தில் இந்த அளவு தமிழ் போற்றப்படுவதால், கட்டாயம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என முடிவு செய்தேன். மேலும் ஐதராபாத்திற்கு அனுப்பும்போது மாண்புமிகு பக்தவத்சலம் செல்லும்மிடமெல்லாம் ஒல்லும் வகையில் தமிழ் பரப்புக எனக் கூறியதும் நினைவுக்கு வந்தது. உடனே இசைவதாகவும் என் புது முகவரி இது என அந்த முகவரி யினையும் குறித்துப் பதில் எழுதினேன். பள்ளி இறுதித் தேர்வுக்கும் செயற்பாட்டிற்கும் உரிய மையம் பூனாவில் இருந்தது. பழைய பம்பாய் மாநில எல்லையில் உள்ள பள்ளி களை இது கட்டுப்படுத்துவதாகவும், புதிதாகச் சேர்ந்த விதர்ப்ப நாட்டு எல்லையில் உள்ள பள்ளிகளுக்கு நாகபுரியில் வேறு மையம் உள்ளதெனவும் அறிந்தேன்.உடன் பூனாவிற்கு என் இசைவினைத் தெரிவித்தேன். உடனே இரண்டொரு நாளில் நான் வரவேண்டிய நாளும் இடமும் குறித்துக் கடிதம்