பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளமையின் நினைவுகள் 87 அப்படிச் செய்தால் அம்மா என்னை எப்படி அடிப்பார்கள் என்பதை நினைக்கும்போது மறுபடியும் திரும்பப் படுத்துக் கொண்டேன். பிறகு அப்பா அம்மா சாப்பிட்டார்களா இல்லையா என்பதுகூட எனக்குத் தெரியாது. இரவெல்லாம் எத்தனையோ கனவுகள் கண்டதாக நினைவு. பக்கத்தில் பாட்டியார் நான் தாக்கத்தில் திடுக்கிடுவதைக் கண்டு தட்டித்தட்டி உறங்கவைத்தார்கள் என்று எண்ணுகிறேன். மறுநாள் பொழுது விடிந்தது. புயல் ஓய்ந்துதான் இருந்தது. அப்பா வெளியே சென்றுவிட்டார். பாட்டியும் பூந்தோட்டத்திற்குப் போய்விட்டார்கள். நான் மெள்ள எழுந்து அம்மாவிடம் சென்றேன். என் உள்ளத்தில் கள்ளம் குடிகொண்டிருந்தது. அப்போதாவது சொல்லி விடலாமா என நினைத்தேன். எப்படிச் சொல்லுவது? எப்படி அடி உதை வாங்கிக்கொள்வது? விரைவில் காலைக் கடன்களை முடித்துக்கொண்டு அன்று ஏழு மணிக்கே வாலாஜாபாத் பள்ளிக்கூடம் செல்லப் புறப்பட்டேன். சாதாரணமாக ஏழரை மணிக்குமேல் என் நண்பர் சிலருடன்தான் நான் பள்ளிக்குப் புறப்படுவது வழக்கம். அன்று எனது நூல்களை எடுத்துக்கொண்டு ஏழு மணிக்கே புறப்பட்டேன். அந்த ரூபாய் நோட்டு நான் வைத்த புத்தகத்திலேயே பத்திரமாக இருந்தது. நான் ஆற்றில் இறங்கியதும் ஒரு பக்கமாகச் சென்று உட்கார்ந்துகொண்டேன். திரும்பத் திரும்பப் பார்த்தேன். நோட்டைக் கையில் எடுத்தேன். துண்டு துண்டாகக் கிழித்தேன். மிக மிகச் சிறுசிறு துண்டுகளாயின. அப்படியே எழுந்து நடந்தேன். இருபதடிக்கு ஒருமுறையாக இரண்டொரு துண்டுகளை வீசி எறிந்துகொண்டே சென்றேன். ஆற்றங்கரையில் வாய்க்காலில் நீர் ஓடிக் கொண்டிருந்தது. கைகளையும் முகத்தையும் அதில் நன்றாகக் கழுவிக்கொண்டேன். என்றாலும் உள்ளத்தின் மாசினை எப்படிக் கழுவுவது? என்னால் பாவம் தந்தையார்