பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 137

அரசியல் பெயரால், பிரிட்டிஷ் ஆட்சியால் நடத்தப்படும் கொடுரங்களைக் கண்ட அரவிந்தர், பரோடாவில் அவரால் அமைதியாக அமர்ந்திருக்க முடியவில்லை. அவர் மக்களுக்கு நேரிடையாக அறிமுகமாகாதவராக இருந்தார். ஏனென்றால், அவர் யாரிடமும் அவ்வளவாக நெருங்கிப் பழகும் சுபாவ முடையவரல்லர். ஆனால், அவரை யாரும் நேரில் பார்த்தது இல்லை. அவர் பெயரைக் கேட்டால் போதும், அவர் ஏதோ ஒரு மேன்மையுடைய சக்தி பெற்றவர் என்று தெரிந்து கொள்வார்கள்.

இந்திய சுதந்திரத்திற்காகப் போராடவும், வங்காளப் பிரிவினையை எதிர்க்கவும் அப்போது முன்னணி வங்கத் தலைவர்களாக இருந்தவர்கள் யார் தெரியுமா? சுரேந்திரநாத் பானர்ஜி, விபின் சந்திரர் பாலர் போன்றவர்களாவர். அவர்களுடன் அரவிந்தரும் இணைந்தார் - பிரிட்டிஷ் அராஜக ஆட்சியை எதிர்த்துப் போராட!.

வங்கத்து இந்த மூன்று வேங்கைகளது இடி முழக்கம் போன்ற கர்ஜனைப் பேச்சுக்கள், பூனைகளைப் புலிகளாக்கிற்று; ஓணான் களை ஓநாய்களாக்கிற்று, மக்களை வீறுபெறும் வெறி மிருகங்களாக, மாற்றின. இவர்களுள் அரவிந்தர்தான்் மக்களுக் குரிய அடையாள வழிகாட்டியாக விளங்கினார். அவருடைய பேச்சின் கருத்து கோடை இடிபோல கனலைக் கக்கியது.

அரவிந்தர் நோக்கம் அரசியலில் அக்கினித் தன்மையான கிளர்ச்சிகளை உருவாக்க வேண்டும் என்பது மட்டுமன்று; மக்களுக்கு விழிப்புணர்வுகளை உண்டாக்கும் கல்வியையும் பரப்ப வேண்டும் என்பதே ஆகும்.

பிரிட்டிஷ் ஆட்சியால் நடத்தப்படும் கல்லூரிகளும், பள்ளிகளும் இந்தக் கல்வியைப் போதிக்கவில்லை; கற்பிக்கவும் முடியாது. அதனால், இந்தியத் தலைவர்கள் ஒன்றுசேர்ந்து, தேசியக் கல்லூரிஎன்ற ஒன்றை உருவாக்கினார்கள். அதன் முதல்வர் பொறுப்பை அரவிந்தர் ஏற்றார்.