பக்கம்:ஆபரேஷனுக்கு அஞ்சவேண்டாம்.pdf/43

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

39இரண்டாவதாக

நான் கூறும் விந்துக்குழாய் வெட்டுதல் என்னும் ஆப்பரேஷன் வேறு, காளைகளுக்குக் காயடித்தல் என்னும் ஆப்பரேஷன் வேறு. காயடித்தல் என்பது விதைகளை நீக்கிவிடுதல் என்பதாகும். விதைகளை நீக்கிவிட்டால் அகச்சுரப்பு நீருமில்லை, புறச்சுரப்பு நீருமில்லை. ஆண்மகன் ஒருவனுக்கு அவ்விதம் செய்தால் அவன் கலவியும் செய்யமுடியாது, கருவுண்டாக்கவும் முடியாது. அதனால் விதையை நீக்கும்போதே அதாவது அகச்சுரப்பு நீரை இல்லாமற் செய்யும்போதே ஆண்மை போகும். நான் கூறும் ஆப்பரேஷனால் புறச் சுரப்பு நீர் மட்டுமே உண்டாகாது. அகச்சுரப்பு நீர் உண்டாகிக்கொண்டே இருக்கும். அதனால் ஆண்மை போகாது, இருந்துகொண்டே இருக்கும். கணவன் கலவி செய்வான், முன்போல் இன்பம் துய்ப்பான், ஆனால் குழந்தை மட்டும் பிறக்காது.

ஆதலால் கணவன்மார்களே! ஆப்பரேஷனால் ஆண்மை போகாது. அதிகப்படவே செய்யும், அஞ்ச வேண்டியதில்லை, ஆப்பரேஷனைச் செய்து கொள்ளுங்கள், நன்மையே அடைவீர்கள்.


விக்டோரியா மகாராணியார்
1841 சனவரி 15ம் நாள்
தம் மாமா பெல்ஜிய அரசருக்கு எழுதிய கடிதம்

அன்புமிக்க மாமா அவர்களே நான் மீண்டும் குழந்தை பெற வேண்டும் என்று நீங்கள் விரும்பமாட்டீர்கள். நான் குடும்பத்தைப் பெருக்கினால் நமக்கும் நாட்டுக்கும் நன்மை உண்டாகாது. எனக்குத் துன்பமும் அசெளகர்யமுமே உண்டாகும். அதிகமாகக் குழந்தைகள் பெறுவது பெண்களுக்கு எத்துணைக்கஷ்டமான காரியம் என்பதை ஆண்கள் எண்ணிப் பார்ப்பதேயில்லை.