பக்கம்:ஆபுத்திரன் அல்லது புண்ணியராஜன்.pdf/13

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8

ஆபுத்திரன்

அதனால் அவன் பட்சிசாலம் பயன் கொள்ளப் பழுத்த ஆலமரம்போல் விளங்குவானாயினான்.

இங்ஙனம் இவன் இடைவிடாது புரிந்த வரும் புண்ணியச் செயலை இந்திரன் தனது ★பாண்டு கம்பள நடுக்கத்தால் அறிந்தான். அதனால் அவன் மகிழ்ந்து, இவனுக்கு வேண்டும் வரங்கொடுப்பதற்கு எண்ணி, வளைந்த உடம்புடன் தண்டூன்றி, ஒரு கிழப்பிராமணன் வடிவங்கொண்டு வந்து, ஆபுத்திரனுக்கு முன்நின்று, "நான் இந்திரன்; உனக்கு வரங்கொடுத்தற்கு வந்தேன்; நீ விரும்புவது யாது? உன்னுடைய பெரிய புண்ணியத்தின் பயனேப் பெற்றுக் கொள்வாயாக" என்று சொன்னான். அதற்கு ஆபுத்திரன், விலாக் குலுங்கும்படியாக நகைத்துப் பரிகசித்து, "ஈவாரும் ஏற்பாரும் இல்லாமையால் ஈந்த உவக்கும் இன்பமும், தவச்செய்கையும் இல்லாத தேவர்நாட்டுத் தலைவனே! வாடியமுகத்துடன் வருந்தி வந்தவர்களது கடும்பசியைத் தீர்த்து, அவர்களது இனிய முகத்தை யான்காணும்படி செய்து, மிகுந்த இன்பம் அளிக்கின்ற எனது இத்தெய்வப் பாத்திரம் ஒன்றுமே போதும். நான் தருமத்தை விலக்கு விற்கும் வியாபாரியல்லன்; உன்னிடம் நான் பெறவேண்டுவது ஒன்றுமில்லை" என்று மிடுக்காய் மதியாது கூறினான்.

கூறவே இந்திரன் கோபித்து, "இவனது அஷயபாத்திரம் ஏமாந்திருக்க உலகத்தில் பசியால் வருத்துவோர் இல்லையாகும்படி செய்வேன்" என்று தன்னுள் நினைந்து, நாடு முழுவதும் வளத்தால் மலியும்படி மேகங்களை ஏவி,


★பாண்டு கம்பளம்-வெள்ளைக் கம்பளம்; இந்திரன் தனது பாண்டு கம்பளம் அசைந்தால் உலகில் நிகழும் விசேட நிகழ்ச்சியை அறிந்துகொள்வானென்று கூறுதல் பெளத்தரது வழக்கம்.