பக்கம்:ஆபுத்திரன் அல்லது புண்ணியராஜன்.pdf/19

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
14
ஆபுத்திரன்

அங்கு வந்தது. வந்து, அவர்களை நோக்கி "நீங்கள் இங்கிருந்தால் மீளவும் உதயகுமாரனால் உங்களுக்குத் துன்பம் உண்டாகும்; ஆகையால் முனிவர்கள் வசிக்கும் சக்கரவாளக் கோட்டத்திற்குச் செல்லுங்கள்’’ என்று கூறி, அவர்களை அடுத்துள்ள சக்கரவாளக் கோட்டம் என்னும் இடத்திற்குச் செல்லும்படி செய்தது. அன்றிரவில் சுதமதியும் மணிமேகலையும் அங்கு தூங்கும்போது மணிமேகலா தெய்வம், மணிமேகலையை மாத்திரம் மயக்கித் தழுவி எடுத்துக் கொண்டு, ஆகாயவழியே முப்பது யோசனை தூரம் தெற்கே சென்று, கடல்சூழ்ந்த மணிபல்லவம் என்னும் தீவில் வைத்துவிட்டுச் சக்கரவாளக் கோட்டத்துக்குத் திரும்பி வந்து, சுதமதியைத் துயிலெழுப்பித் தான் மணிமேகலையைத் தூக்கிச் சென்றதையும், அவள் பூர்வஜென்ம உணர்ச்சிபெற்று இன்றைக்கு ஏழாவது நாளிலே வருவாள் என்பதையும் சொல்லிப்போனது.

அப்பால் சுதமதி நித்திரை தெளிந்து, மணிமேகலையைக் காணாது வருந்திப் புலம்பிப் பொழுது புலர்ந்தபின் வருத்தத்தோடு நகரம் புகுந்து, மாதவியை அடைந்து நிகழ்ந்தவற்றைக்கூறி, இருவரும் மணியிழந்த நாகம்போல் துன்பத்துள் மூழ்கியிருந்தார்கள்,

இவர்கள் இங்ஙனம் வருந்திக்கொண்டிருக்க, மணி பல்லவத்தில் கடலருகே மணலில் துயின்ற மணிமேகலை, கண்விழித்துச் சுதமதியைக் காணப்பெறாது, இடமும் தோற்றங்களும் வேறாயிருப்பதை அறிந்து திகைத்தாள். சுதமதியை அத்தீவத்துப் பலவிடங்களிலும் தேடினாள்; தேடியும் அவளை அடையப்பெறாமையால், பல சொல்லிப் பிரலாபிக்கின்றவள், மதுரையில் கொலையுண்டிறந்த தன் தங்தை கோவலனை நினைந்து, புலம்பிக்கொண்டிருந்தாள்.