பக்கம்:ஆபுத்திரன் அல்லது புண்ணியராஜன்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

ஆபுத்திரன்

-தைக் கேட்பாயாக. சில நாட்களுக்கு முன்னர் காவிரிப் பூம்பட்டினத்து அரசன் கிள்ளிவளவன், ஒருநாள் சோலையில், நாக நாட்டரசனாகிய வளைவனன் மகள் பீலிவளை என்பாளை எதிர்ப்பட்டுக் காதலித்துக் காந்தருவ மணம் செய்து, அவளுடன் அச்சோலையில் ஒரு மாதம் வரை வாழ்ந்திருந்தனன்; பீலிவளை, ஒருநாள் அரசனிடம் சொல்லாது தன்னிருப்பிடம் சென்று விட்டாள். அரசன் வருந்தி, அவளை எங்கும் தேடியும் காணாமல், முக்காலம் உணர்ந்த ஒரு சாரணரைக் கண்டு வினவினான். சாரணர், அவளே இப்போது நான் கண்டிலேனாயினும் அவளை இன்னாளென்று முன்னரே அறிவேன்; அவள் இனி உன்னிடம் வரமாட்டாள்; உனக்கு அவள் வயிற்றிற் பிறக்கும் மகனே உன்னிடம் வருவான்; நீ இதுபற்றி வருத்தாதே; இவ் வருத்த மிகுதியால் இந்நகரத்தில் தொன்று தொட்டு நடத்திவரும் இந்திர விழாவை நடத்துதற்கு மறந்து விடாதே; இந்திர விழாச் செய்யாது தவறுமாயின் மணிமேகலா தெய்வத்தின் சாபத்தால் உன் நகரத்தைக் கடல் வந்தழிப்பது தப்பாது எனச் சொல்லிப் போயினர்; அந்நாள் முதல் காவிரிப்பூம்பட்டினத்து மாந்தர்கள், எந்நாளில் இந்நகருக்கு அழிவு வருமோ என்று கலக்கமுற்றிருந்தார்கள். இஃது இங்ஙனமாக; அரசனைவிட்டுப் பிரிந்த பீலிவளை, ஒரு ஆண் குழந்தையைப் பெற்று, அக்குழந்தையோடு சில நாளைக்குமுன் இத்தீவிற்கு வந்து, புத்தபீடிகையை வலம் வந்து தொழுதுகொண்டிருக்கும்போது, கம்பளச் செட்டி யென்னும் வணிகனது கப்பலொன்று இத்தீவின் துறையில் தங்கியது; பீலிவளை உடனே அவனிடம் சென்று ‘இவன் சோழன் மகன்; இவனை அரசனிடம் சேர்ப்பது உன் கடன்; என்று குழந்தையைச் செட்டிகையிற்