பக்கம்:ஆபுத்திரன் அல்லது புண்ணியராஜன்.pdf/6

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
ஆபுத்திரன்
அல்லது
புண்ணிய ராஜன்

பண்டைக்காலத்தில் வாரணாசி என்ற சிறப்புப் பெயர் பெற்ற காசிமா நகரத்தில் 'அபஞ்சிகன்’ என்னும் அந்தணன் ஒருவன் இருந்தான். அவன் இளம் பருவத்திலேயே நல்லாசிரியரை அடைந்து, வேதங்களையெல்லாம் வழுவறக்கற்று வேதபாரங்கதனாய், 'ஆரண உபாத்தியாயன்’ என்னும் பட்டமும் பெற்றான். பின்பு அவன் ஆசிரியர் அநுமதியால் நல்லறமாகிய இல்லறம் நடத்தக்கருதி, வாழ்க்கைத் துணையாகச் சாலினி என்னும் ஒரு பார்ப்பனியை மணந்து வாழ்ந்துவந்தான்.

அங்ஙனம் வாழுநாளில், அவன் மனைவியாகிய சாலினி, மகளிர்க்கு இன்றியமையாத கற்பொழுக்கத்தினின்று வழுவிக் கணவனுக்குப் பெருந்தீங்கிழைத்தவளானாள். அது பற்றி அவள் அச்சமும், நாணமும், துக்கமும் கொண்டு, அப்பாவத்தைத் தீர்த்துக் கொள்ளக்கருதி, குற்றம்செய்த குலமகளிர் அக்குற்றத்றைப் போக்குதற்குக் குமரித் தீர்த்தம் ஆடச்செல்லும் அக்கால வழக்கப்படி தான் கன்னியாகுமரியில் நீராடவேண்டுமெனத் துணிந்தாள். துணிந்தபடியே தான் கர்ப்பிணியாயிருந்தும் அதனையுங் கருதாது, ஒருவரும் அறியாவண்ணம் அவள் அகத்தைவிட்டு வெளியேறிப் பிரயாணமானாள்.