பக்கம்:ஆபுத்திரன் அல்லது புண்ணியராஜன்.pdf/8

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆபுத்திரன்

3

யோடு விரைந்து தன்னூர் சென்று, வீடு சேர்ந்தான். சேர்ந்த அவன், அப்பிள்ளைக்கு 'ஆபுத்திரன்' என நாமம் சூட்டி, அதனை மிகுந்த ஆசையுடன் 'வறியன் ஒரு செய்வாளன் அச்செய்விளையக் காக்கும் அதுபோலப் போற்றிப்புனைந்து வளர்த்துவந்தான், குழந்தை இளம்பிறை போல் வளர்ந்து, ஐந்தாண்டு நிரம்பியது. பூதியும் புதல்வனை உபநயனம் செய்வதற்கு முன்னரே எல்லாக் கலைகளையும் வேதங்களையும் நன்கு பயில்வித்தான். ஆபுத்திரனும் அவற்றையெல்லாம் ஐயம் திரிபு முதலிய குற்றமறக்கற்று, அன்பு, அருள், வாய்மை, அடக்கம் முதலிய நற்குணங்களையே பொற்கலனாகப் பூண்டு ஒழுகுவானாயினான்.

இங்ஙனம் அவன் ஒழுகிவருநாளிலே அவ்வூரிலுள்ள ஓர் அந்தணன் வேள்வி செய்யக்கருதி, ஒரு பசுவைக் கொண்டு வந்து தன் வீட்டினுள் கட்டிவைத்திருந்தான். இதனையறிந்த ஆபுத்திரன் அப்பசுவை அம்மரண வேதனையினின்றும் விடுவிக்கக் கருதி, அவ்வந்தணன் அகத்தினுள் புகுந்தான். புகுந்த அவன், யாக சாலைக்கருகில் மாலை சுற்றிய கொம்புகளையுடையதாய்த் தனக்கு நேரவிருக்கும் மரண துன்பத்தைக் கருதி, அஞ்சிக் கதறி, வேடர் வலையில் அகப்பட்ட மான் பிணைபோல் வருந்திக்கொண்டிருந்த அப் பசுவைக் கண்டான், கண்டவுடன் 'அந்தோ! என்னே ! இந்த அந்தணர் தம் செந்தண்மை' என மனம் இரங்கி, 'இப் பசுவை மரணவேதனையினின்றும் நீக்குமாறு களவால் நடு இரவில் கவர்ந்து செல்வேன்' எனத் தனக்குள் நினைத்தான். அங்ஙனமே அவ்வந்தணன் வீட்டில் ஒரு பக்கத்தில் தங்கியிருந்து, அன்றிரவில் பசுவைக் கைப்பற்றிப் பருக்கைக் கற்கள் நிரம்பிய காட்டு வழியாக ஊருக்குப் புறத்தே சிறிதுதூரம் கொண்டுபோய் விட்டான். பின்பு அந்தணர்