பக்கம்:ஆப்பிள் பசி.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நகைக் கடைக்குப் போய் அம்மாவின் நகைகளைக் கல்லில் உரசி, மாற்றுப் பார்த்து, குத்துமணி எடை போட்டுப் புணம் வாங்குவதற்குள் மணி ஒன்பதுக்கு மேல் ஆகிவிட்டது. 'டிராமாவுக்கு லேட்டாயிடுத்தே!'

குமாரசாமியின் இடுப்பில் இப்போது நகைகளுக்குப் பதிலாக நூறு ரூபாய் நோட்டுகளாய் மாறி இருந்தன. அடிக்கொரு தடவை இடுப்பைத் தொட்டுப் பார்த்துக் கொண்டவன், "ஐயாயிரம் எதிர்பார்த்தேன். ஆறாயிரமாக் கெடச்சுட்டுது" என்று காவிப் பற்களைக் காட்டினான்.

"உரக்கப் பேசாதீங்க, எவனாவது பிக்பாக்கெட் அடிச்சுடப் போறான்."

"அவன் பொழைச்சுருவானா அப்புறம்?" என்று மீசையைத் தடவியவன், "இனிப்பு ஏதாச்சும் சாப்பிடறயாம்மா ஜாங்கிரி, மைசூர்ப்பாகு!" எதிரில் பெட்ரமாக்ஸ் விளக்கில் பிரகாசித்த மிட்டாய்க் கடையைக் காட்டினான் .

"வேணாம்."

"காராசேவு?"

"ஊஹூம், டிராமா போவம்."


சூரியகுளம்தகரக்கொட்டகையில் வள்ளித்திருமணத்தை முன்னிட்டு வாசலில் சரிகைத் தொப்பிக்காரர்கள் பாண்டு வாசித்துக் கொண்டிருந்தார்கள். தெரு ஓரம் சாய்ந்திருந்த வேப்ப மரக்கிளைகளில் கலர் மின்சார பல்புகள் நிர்வாணமாய் எரிந்து கொண்டிருந்தன.

திருவிழாவுக்கு வந்திருந்த கிராமத்து மக்கள் அத்தனை பேரும் நாடகம் பார்க்க 'ஜே ஜே' என்று நெரிசலாய் நின்றார்கள். அந்தக் கூட்டத்தில் எப்படியோ முண்டி அடித்துப் புகுந்து டிக்கட் பொந்தில் கையை விட்டு இரண்டு முதல் வகுப்பு டிக்கட்டுகளை வாங்கி வந்துவிட்டான் குமாரசாமி.

ஒன்பது மணி என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும் நாடகம். பத்தரை மணிக்குத்தான் ஆரம்பமாயிற்று.

திரைக்குள்ளேயிருந்து சாம்பிராணி மணம் வீச, "ஜெய ஜெய கோகுல் பாலகா.." என்று காதர் பாட்சா கணீரென்று குரலெடுத்துப் பாட அந்தக் குரலும் ஹார்மோனிய நாதமும் கொட்டகையை நாத வெள்ளத்தில் மிதக்கச் செய்தன.

"கோகுலாட்டமிக்கும் குலாம் காதருக்கும் என்ன சம்பந்தம்னு கேட்பாங்களே, பார்த்தியாபாப்பா! இப்பபாடறவரு காதர் பாட்சா சாயபு -- பாட்டு 'கோகுல பாலகா!' வேடிக்கையா இல்லை?"

பாப்பாவின் கவனமெல்லாம் எப்போது திரை விலகும். எப்போது கோமாளி சாமண்ணாவைப் பார்க்கலாம் என்பதி-

6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிள்_பசி.pdf/10&oldid=1027727" இலிருந்து மீள்விக்கப்பட்டது