பக்கம்:ஆப்பிள் பசி.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 பின் வரிசையில் பாப்பா தலைகுனிந்து இருக்கும் நிலை கண்டு கோமளத்தின் உள்ளம் உருகியது. அந்தப் பருவகால உணர்வுகள் அவள் அறியாததல்ல. அதன் வேகங்கள், சக்திகள், ஆத்திரங்கள், வெறிகள், உன்மத்தங்கள் எல்லாமே அவள் அனுபவித்து அறிந்தவைதான்.

பருவம் அரும்பும்போது அந்த உணர்வும் அரும்புவதாயிற்றே!

கோமளத்தின் யெளவனம் சற்று முன்னரே தழைக்க ஆரம்பித்துவிட்ட நிலையில், அவளது பதினோராவது வயதில், அவளது அத்தை மகன் ராஜன் கட்டுக் குடுமியுடன் மயில்கண் வேட்டி கட்டி, மலையான முண்டு போர்த்தி வந்து நிற்பானே, அதை யாரால் மறக்க முடியும்?

நன்றாகப் பாடுவான். குரல் தேனாக இனிக்கும். ஹரிகேசவ நல்லூர் பாகவதரிடம் பாடம். ‘பையன் பிரமாதமாக வருவான்’ என்பது அவர் கணிப்பு.

அவனுக்கு அப்போது பதினெட்டு வயதுதான். அத்தை பத்மாசினியின் ஒரே மகன் , அத்தை குடும்பமே சங்கீதக் குடும்பம். ராஜன் அதற்கு முழு வாரிசாக வந்திருந்தான்..

ஒரு ராத்திரி, கோமளத்தின் வீட்டில் நவராத்திரியின் போது அவன் பாடிய அந்தக் காட்சி நினைவில் வந்தது. ராஜன் நடுக்கூடத்தில் நாயகமாக உட்கார்ந்து பாடிக் கொண்டிருக்கிறான். அந்தக் கூடத்தின் விஸ்தாரத்துள் அவன் குரல் சிற்றலையாக அலைகிறது. அதன் ரீங்காரக் குழைவுகள் எல்லோர் உள்ளங்களையும் பிசைந்து எடுக்கிறது. எல்லோரும் மெய்மறந்து கிடக்கிறார்கள்.

101

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிள்_பசி.pdf/100&oldid=1029730" இலிருந்து மீள்விக்கப்பட்டது