பக்கம்:ஆப்பிள் பசி.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பதினோரு பிராயமே ஆகியிருந்த கோமளத்துக்கு, உடல் அமைப்பில் அதற்குள் சிறுமித்தனம் மறைந்து பருவ மாறுதல் நிகழ்ந்து கொண்டிருந்தது. அப்பா ஜாதகக் கட்டைத் தூக்கி மூன்று வருடமாக வியர்த்துக் கொண்டிருந்தார்.

அன்று ராஜன் பாடத் தொடங்கியதுதான் தாமதம்! கோமளத்தை ஒரு புதிய உணர்வு போர்த்திக் கொண்டது.

கோபால கிருஷ்ண பாரதியின் ‘வாராமல் இருப்பாரோ’ என்ற அந்தப் பாடல் வரியும், சுருட்டி ராகத்தின் இனிமையும், அத்தான் ராஜனின் அழகு வடிவமும் ஆண்மையும் எல்லாமே அவள் மனத்துள் ஒரு மயக்க உணர்ச்சியைக் கிளறி விட்டது.

உள்ளே ஒரு கள்ள நினைவு தோன்றி, ‘ராஜன், ராஜன்’ என்று சொல்லிக் கொண்டு அவனைச் சுற்றிச் சுற்றி வந்தது.

இரவெல்லாம் உணர்ச்சிப் பெருக்கில் கிடந்து உழன்று விட்டுக் காலையில் எழுந்ததும், “அம்மா, இங்கே வந்து பாரு!” என்று கிணற்றடியில் பாவாடையை ஒரு கையால் சற்றே உயர்த்திக் கொண்டு சிறுமி கோமளம் இரைய,

அம்மா ஓடிவந்து பார்த்து அவளது நிலையை உணர்ந்து, “ஐயோ ராமா! வெளியிலே சொல்லித் தொலைக்காதேடீ. கல்யாணத்துக்கு முன்னாலே திரண்டுட்டாளான்னு நாலு பேர் சிரிக்கப் போறா!” என்று தலையில் அடித்துக் கொண்டது இன்னும் அவள் நினைவில் உள்ளது.

ராஜன்தான் அவளது முதல் விழிப்பு. முதல் காதல், முதல் மோகம்.

அதற்குப் பின் அப்பா பதினைந்தே மாதத்திற்குள் வரன் பார்த்து அவளுக்கு வரதாச்சாரியைத் திருமணம் செய்து வைத்து விட்டார்.

இருந்தும் மனசில் விழுந்த முதல் ஓவியம், ராஜனின் உருவம், மறக்க முடியாதபடி கல்லில் செதுக்கியது போல் நிலைத்து விட்டது.

அத்தை வசதியில்லாவதவள். அப்பாவுக்கு, ‘அவன் ஒரு பாடகன்தானே!’ என்ற அலட்சியம்! விறுவிறு என்று மூன்று வருடத்தில் முன்னுக்கு வந்த ராஜன் திடீரென்று டி. பி. க்கு ஆளாகிப் பத்து மாதத்தில் உருக்குலைந்து அத்தைக்கு முன்னாடியே இறந்து போனான்.

கோமளத்துக்கு அது ஒரு பலத்த அடி. ராஜனை அவள் மணந்திருந்தால் அவனுக்கு இந்த வியாதியே வந்திருக்காது என்று எத்தனை முறை நினைத்திருக்கிறாள்! அந்த வலி இன்னும் அவளிடம் இருந்தது. தொட்டுப் பார்த்தால் குபுக்கென்று அழுகை வந்துவிடும்.

அவளது சமூக அமைப்புக்கும், அந்தப் பழைய நாட்களுக்கும் காதல் என்ற உணர்ச்சியே ஒவ்வாது. அந்த வார்த்தையைக் கூட அவள் உச்சரிக்க முடியாது. ஏதோ அசிங்கத்தைச்

102

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிள்_பசி.pdf/101&oldid=1029731" இலிருந்து மீள்விக்கப்பட்டது