பக்கம்:ஆப்பிள் பசி.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

-லேயே இருந்தது. மாலையில் போஸ்டரில் பார்த்த அந்த ஆசை முகம் அடிக்கடி அவள் நினைவில் தோன்றித் தோன்றி......

கடைசியாகத் திரை விலகி சாமண்ணா மேடைக்கு வந்தான்.

வரும்போதே கண்களைச் சுழற்றினான். சார்லி சாப்ளின் மாதிரி கால்களைத் தொட்டி போல் வளைத்தான். பிரம்பைச் சுழற்றினான். குல்லாயைப் பிரம்பால் தூக்கித் தலைக்கு மேல் சுழற்றினான். குளுகுளுவென்று கொட்டகை முழுதும் சிரித்தது! அவனுடைய ஒவ்வொரு அசைவுக்கும் கைதட்டலும் ஆரவாரமும் பிரமாதப்பட்டது.

"மாடி மேலே மாடி
அதன் மேலே ஒரு லேடி
அவளும் நானும் ஜோடி."

என்று பாடிக் கொண்டே ஆர்மோனியத்தின் அருகில் வந்து நின்றான், காதர்பாட்சா அந்த மெட்டிலேயே சரளி வாசித்தார். சாமண்ணா சுழன்று சுழன்று ஆடி, தலைகீழாக ஒரு பல்டி அடித்து அந்த வேகத்திலேயே எழுந்து நின்றபோது கொட்டகை அதிர்ந்தது.

"ஒன்ஸ்மோர்!" என்ற விஸில் சத்தம்! சாமண்ணாவுக்கு உற்சாகம் தாங்கவில்லை. மறுபடியும் அந்தர் பல்டி!

அடுத்த காட்சியில் வள்ளி வேடத்தில் வரப்போகும் ஜில் ஜில் ரமாமணி இப்போது லேடி வேடத்தில் வந்து நின்றாள். சர்மண்ணாவுக்கு எதிர்ப் பாட்டுப் பாடினாள். சிருங்காரமாய் அவனைக் கட்டிப் பிடித்துக் கொஞ்சினாள்.

சாமண்ணாவை அவள் அணைத்துக் கொஞ்சியது பாப்பாவுக்குப் பிடிக்கவில்லை, 'இந்தப் பொறாமை உணர்வு தனக்கு ஏன் வர வேண்டும்? யாரோ ஒரு கூத்தாடிப் பையனை யாரோ ஒரு கூத்தாடிப் பெண் தொட்டால் அதைக் கண்டு நான் ஏன் பெருமூச்சு விட வேண்டும்?' பாப்பாவின் உள் மனம் கேட்டது.

அவனுடைய அந்தக் கோணங்கி மேக்கப்புக்குப் பின்னால் ஓர் அழகு இருந்தது. கண்களில் வசீகரம் தெரிந்தது. அந்தக் காலத்து நாகரிகமான பாகவதர் ஜில்பாக் குடுமியே அவனுக்கு ஒரு கவர்ச்சியைத் தந்தது.

அரிதாரம் பூசி மேக்கப் மூலம் அவன் தன் வயதை உயர்த்திக் காட்டியிருந்தபோதிலும் அந்த முகத்தில் இருபது வயதின் இளமை ஒளிந்திருந்தது. நாடகம் முடிந்ததும் அவனை நேரில் பார்த்து நாலு வார்த்தை பாராட்டிப் பேச நினைத்தாள் பாப்பா.

7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிள்_பசி.pdf/11&oldid=1027726" இலிருந்து மீள்விக்கப்பட்டது