பக்கம்:ஆப்பிள் பசி.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தில் உடல் படபடத்தது. “என்னடா சொன்னே, ஓட்டல்காரப் பயலே! உடம்பு எப்படி இருக்கு? பணத் திமிரா?” என்று எம்பி அவர் கன்னத்தில் ஓங்கி ஓர் அறை அறைந்தான்.

செயலற்றுப் பிரமித்து நின்ற ஓட்டல்காரர் கன்னத்தைத் தடவிக் கொண்டு, “டேய், அவனைப் பிடிங்கடா, உதைங்கடா!” என்று கூப்பாடு போட்டு சிப்பந்திகளை அழைத்தார். யாரும் கிட்டே வரவில்லை. “ஐயருக்கு நல்லா வேணும்!”

சாமண்ணா அங்கே நிற்காமல் அடுத்த கணம் சைக்கிளிள் ஏறி மாயமாய் மறைந்துவிட்டான். அன்று பகல் எங்கெங்கோ அலைந்துவிட்டு அறையில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்த சாமண்ணா கீழே நாய் குரைக்கும் சத்தம் கேட்கவே யாரோ வருகிறார்கள் என்பதை ஊகித்தான். கதவு தட்டப்படும் சத்தம் கேட்டதும் எழுந்து போய்க் கதவைத் திறந்தான். அங்கே இரண்டு போலீஸ்காரர்கள் நின்று கொண்டிருந்தார்கள்.

“கொஞ்ச நாளைக்கு முன்னே யாரோ ஒருத்தன் தற்கொலை பண்ணிக்கிட்ட வீடுதானே இது?”

“ஆமாம், அதுக்கென்ன இப்போ?”

”இல்லே, அப்ப ஒருமுறை இங்கே வந்திருந்தோம். இப்ப நாங்க வந்தது அது சம்பந்தமா இல்லை. இது வேற கேஸ். உங்களைத்தான். தேடி வந்திருக்கோம்”

“என்னையா? என்ன சங்கதி?”.

இந்த வீட்டைச் சோதனை போடச் சொல்லி உத்தரவு.“

”எதுக்கு ?”

“உங்க பேர்ல அம்பாள் லாட்ஜ் முதலாளி கம்ப்ளெயிண்ட் கொடுத்திருக்கார். அவர் மகளுடைய, தங்கச் சங்கலியைக் கானலையாம். நீங்கதான் எடுத்துட்டு வந்திருக்கணும்னு சந்தேகப்படறார். தெஃப்ட் கேஸ்....”


“அடப்பாவி! இது அக்கிரமம்! அந்த அயோக்கியன் என் மீது வீணாப் பழி போடறான். நான் யார்னு தெரியாதா உங்களுக்கு? நீங்க அந்த ஓட்டல்காரன் பேச்சை நம்பறீங்களா? அவன் பெண்ணை, அந்தப் பைத்தியத்தை நான் கல்யாணம் செய்து கொள்ள மாட்டேன்னு தெரிஞ்சதும் இப்படி என் மேலே திருட்டுக் கேஸ் ஜோடிச்சிருக்கான்.”

“உங்களை எங்களுக்கு நல்லாத் தெரியுங்க. அதான் டிராமாவிலே தினம் பாக்கறமே! ஆனாலும் எங்க டூட்டி. மேலிடத்து உத்தரவு.”

“நல்லாப் பாருங்க, உள்ளே வாங்க.”

முதலில் அலமாரியிலுள்ள புத்தகங்களை ஒவ்வொன்றாக எடுத்து உதறினார்கள். மடிக்கப்பட்ட இரண்டு நூறு ரூபாய் நோட்டுகள் கீழே விழுந்தன.

24

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிள்_பசி.pdf/28&oldid=1029128" இலிருந்து மீள்விக்கப்பட்டது