பக்கம்:ஆப்பிள் பசி.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

“இது ஏது ரூபாய்? இங்கே எப்படி வந்தது?”

“ஐயோ, எனக்குத் தெரியாது. சத்தியமாத் தெரியாது. எனக்கும் இந்தப் பணத்துக்கும் சம்பந்தமே இல்லை. என் சம்பளப் பணத்தை இதோ பாக்கெட்டில் வச்சிருக்கேன்” என்று பணத்தை எடுத்துக் காட்டினான்.

“அப்ப இந்த இருநூறு ரூபாய் உங்களது இல்லையா?”

“நிச்சயமா இல்லே.”

“ம்... அந்தத் தகரப் பெட்டியைத் திறந்து பாருப்பா....”

“தாராளமாப் பாருங்க.”

டிராமா போஸ்டர், சில கடிதங்கள், வேட்டி சட்டைகளைத் தவிர அதில் வேறெதுவும் தென்படவில்லை.

ஒரு கான்ஸ்டபிள் பாத்ரூமுக்குள் போய்த் தேடினான். அங்கிருந்த சோப்புப் பெட்டியைத் திறந்து பார்த்த அவன், “இதோ, இதில் இருக்குங்க செயின்!” என்று சத்தமாகச் சொன்னான்.

“எனக்கு ஒண்ணுமே தெரியாது. இதெல்லாம் ஓட்டல்காரர் சூழ்ச்சி. நான் இல்லாதபோது கொண்டு வச்சிருக்கார்” என்று அலறினான் சாமண்ணா.

“நீங்களே நேரே வந்து இன்ஸ்பெக்டர்கிட்டே சொல்லிடுங்க. ஸ்டேஷனுக்கு வரீங்களா?”

“இந்த ஊரில் மானம் மரியாதையோடு இருந்துகிட்டிருக்கேன். நான் ஒரு கலைஞன். உங்களோடு தெருவிலே வந்தால் நாலு பேர் என்ன நினைப்பாங்க. நீங்க இப்படி என்னை அவமானப்படுத்தலாமா?”

“நாங்க என்ன நீங்க செய்ய முடியும்? நீங்க இன்ஸ்பெக்டர் ஐயாகிட்ட வந்து பேசிக்குங்க. உங்களுக்கு அவமானமா இருந்தா தனியாவே போய் இன்ஸ்பெக்டரைப் பாருங்க. அதிலே எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. நாங்க போய் ஓட்டல்லே காபி சாப்பிட்டுட்டு பின்னோடயே வந்துடறோம். நீங்க போய்க்கிட்டு இருங்க” என்றனர்.

சாமண்ணா சைக்கிளில் புறப்பட்டான்.

25

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிள்_பசி.pdf/29&oldid=1029345" இலிருந்து மீள்விக்கப்பட்டது