பக்கம்:ஆப்பிள் பசி.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மாயிடனும்னு மாரியாத்தாளை வேண்டிக்கிட்டிருக்கேன். காலையிலேர்ந்து சாப்பிடக் கூட நேரமில்லே.”

“புலகாரம் சாப்பிடறயா? புட்டு செஞ்சு வச்சிருக்கேன்.”

“புட்டா? திடீர்னு என்ன புட்டு மேலே ஆசை வந்திருச்சு, உனக்கு?”

“எனக்கில்லை. அபரஞ்சிக்குத்தான். புள்ளைதாச்சிப் பொண்ணு கேட்டுதேன்னு செஞ்சிருக்கேன்."

“எனக்கு மனசே சரியில்லைம்மா. இப்ப எதுவும் இறங்காது.”

இந்தக் குமாரசாமி ஒரு வித்தியாசமான பிறவி.

நாலு ஏக்கர் நிலத்தை வைத்துக் கொண்டு, ஊருக்கு நல்லவனாய், நாலு பேருக்கு உபகாரமாயிருந்து கொண்டு ஜீவனம் நடத்தும் அபூர்வப் பிறவி. ஐயர் குடும்பத்தைப் போலவே, அபரஞ்சி குடும்பத்தையும் ஒரு வாஞ்சையோடு நேசித்து ஆதரவாகப் பழகி வருபவன்.

அபரஞ்சியை நெஞ்சுக்குள் வைத்துத் தினமும் ஆராதிக்கும் ஒரு ஊமைக் காதலனாய் வாழ்ந்து கொண்டிருந்தான். இப்போது அந்தக் காதலும் நீறுபூத்த நெருப்பாகி, அதுவும் சாம்பலாகி விட்டது.

மேட்டுப்பட்டி ஐயரின் மனைவி தலையைச் சாய்த்து ஒரு மாதம் ஓடிவிட்டது. ஆரம்ப துக்கங்கள் ஓரளவு வடிந்து மிராசு ஐயர் மறுபடியும் திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்ற வதந்தி ஊருக்குள் அடிபட்ட போதிலும் ஐயர் அதையெல்லாம் லட்சியம் செய்யாமல் இரவு பகலாக அபரஞ்சியின் மூச்சுக் காற்றையே சுவாசித்துக் கொண்டிருந்தார்.

ஆனாலும், அபரஞ்சிக்கு அதைக் கேட்காவிட்டால் இதயம் வெடித்து விடும் போலிருந்தது. “கல்யாணம் செஞ்சுக்கப் போறீங்களாமே? பேசிக்கிறாங்களே?”

“ம்... அதையெல்லாம் நீ நம்பறயா? வயசு அம்பதுக்கு மேல ஆச்சு! இனிமே கல்யாணம் என்ன வேண்டிக் கிடக்கு? என் பேர் சொல்ல பிள்ளையா குட்டியா?”

பிள்ளை இல்லங்கற கவலை வேணாம் உங்களுக்கு. இப்ப உங்க குழந்தை என் வயிற்றிலே: வளருது.”

“கேள்விப்பட்டேன். குமாரசாமி சொன்னான். ஹும்...” என்று பெருமூச்சு விட்டார் மிராசுதார்.

“ஏன் விரக்தியாப் பேசறீங்க? பெருமூச்சு விடறீங்க? சந்தோஷமா இல்லையா உங்களுக்கு? நானே இதை உங்களுக்கு என் வாயாலே சொல்லலையேன்னு வருத்தமா?”

“அதெல்லாம் இல்லை. உன் வயிற்றில் பிறக்கப் போகிற அந்தப் பிள்ளை என் குழந்தைதான்னு நான் ஊர் அறியச் சொல்லிக்க முடியாதே!”

35

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிள்_பசி.pdf/38&oldid=1029190" இலிருந்து மீள்விக்கப்பட்டது