பக்கம்:ஆப்பிள் பசி.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

“அரிச்சந்திரன் பொய் சொல்ல மாட்டான். ஆனா நீ பொய் சொல்றே. உண்மையைச் சொல்லிடு. இல்லேன்னா கேஸ் ரொம்ப ஸீரியஸாப் போயிடும்.”

“அன்னிக்கு நான் ஊர்லயே இல்லாதபோது இந்தக் கொலையை நான் எப்படி செஞ்சிருக்க முடியும்?”

“எங்கே போயிருந்தே?”

“பூவேலி கிராமத்துக்கு...”

“அங்கே என்னா?”

“தெருக் கூத்து பார்த்துக்கிட்டிருந்தேன், அர்ஜுனன் தபஸ், அன்னி ராத்திரி ஊர் ஜனங்க என்னைக் கெளரவிச்சாங்க. நான் ஒரு கலைஞன் என்கிற முறையிலே எனக்கு மாலை போட்டாங்க.”

“சாட்சி இருக்கா?” “ ஊர் முழுக்குமே சாட்சிதான்!”

“அப்படியா?

முனகாலா யோசித்தார். “இந்தாப்பா கான்ஸ்டபிள்! இவளை லாக்-அப்பிலே போட்டு வை. அப்புறம் விசாரிக்கலாம்” என்று உத்தரவு போட்டார். சாமண்ணா லாக்-அப் அறைக்குக் கொண்டு போகப்பட்டான்.

உள்மனம், ‘இப்படி நாடகக் கம்பெனியிலே சேரவும் வேண்டாம்; அடுத்தடுத்து சோதனை வரவும் வேண்டாம். அரிச்சந்திரனுக்குக் கூட இவ்வளவு சோதனை வந்திருக்காது.’

சின்ன வயசில் எத்தனையோ பேர் புத்தி சொன்னாங்க. கேட்டனா? படித்திருக்கலாம். அப்பா மாதிரி கனபாடிகளாயிருக்கலாம். நாலு ஊரில் பாரதம் படித்துச் சம்பாதிச்சிருக்கலாம். எதுவும் வேண்டாம் என்று சொல்லி விட்டு இப்படி விடாப்பிடியாக நாடகத்தில் சேர்ந்தேன். என் தலையெழுத்து! ஒரு பக்கம் மாலை மரியாதை! இன்னொரு பக்கம் போலீஸ் லாக் அப்...!

மறுநாள் காலை கான்ஸ்டபிள் கதவைத் திறந்த போது, ‘இன்னும் என்ன நேரப் போகிறதோ’ என்று நடுங்கினான்.

கான்ஸ்டபிள் அவனை இன்ஸ்பெக்டர் அறைக்கு அழைத்துச் சென்றார்.

யாரோ ஒருத்தர் வக்கீல் மாதிரி இன்ஸ்பெக்டரிடம் பேசிக் கொண்டிருந்தார், தலையில் தலைப்பாகை, நெற்றியில் ஸ்ரீசூரணம், காதில் வைரக் கடுக்கன். கறுப்பு கோட்.

“என்னங்க, இவ்வளவு தூரம்? காலையிலேயே கிளம்பி வந்துட்டீங்களே?” என்று போலீஸ் நாயுடு அவரிடம் கேட்டுக் கொண்டிருந்தார்.

சர்மணா உள்ளே நுழைந்ததும் வக்கீல் அவனை உன்னிப்பாய்ப் பார்த்தார்.

முனகாலா திரும்பினார்.

50

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிள்_பசி.pdf/53&oldid=1029360" இலிருந்து மீள்விக்கப்பட்டது