பக்கம்:ஆப்பிள் பசி.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

“இந்தா மேன்! உனக்கு ஜாமீன் கொடுத்திருக்காங்க! நீ போலாம்! ஆனா ஊருக்குள்ளேயே இருக்கணும் தெரிஞ்சுதா? தினமும் ஒரு தடவை இங்கே ஆஜராகணும்...”

தலையை ஆட்டினான்.

“அப்போ நான் வரேன் நாயுடு” என்று இன்ஸ்பெக்டரிடம் சொல்லிக் கொண்டு ஒரு தோரணை யோடு புறப்பட்டார் வக்கீல்.

சாமண்ணா வக்கீல் பின்னோடு நாய்க்குட்டி போல் தொடர்ந்து சென்று, “ரொம்ப நன்றி ஐயா, எனக்கு ஜாமீனில் விடுதலை வாங்கித் தந்த உங்களை ஆயுசுக்கும் மறக்க மாட்டேன். நீங்க யாரு? எனக்கு எப்படி உதவி செய்ய வந்தீங்கன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?” என உணர்ச்சி பொங்கக் கேட்டான்.

“மத்தியானம் மூணு மணிக்கு மேல் வீட்டுக்கு வந்து என்னைப் பாரு. தென்னை மரத்துத் தெரு, வக்கீல் வரதாச்சாரி வீடுன்னு கேளு.”

வாசலில் குதிரை பூட்டிய பெரிய பீட்டன் வண்டி நின்றது.

வரதாச்சாரி தார்ப்பாய்ச்சிய பின்புறம் தெரிய உள்ளே குனிந்து ஏறி மெத்தையில் அமர்ந்தார். கடுக்கன் அப்படியும் இப்படியும் வெட்டு வெட்டியது. வாயாடித்தனமும் ஓர் அலட்சியமும் சேர்ந்த கம்பீரம் முகத்தில் தெரிந்தது.

ஃபைல் கட்டை எதிர் மெத்தையில் வீசிவிட்டு, காலரைத் தளர்த்தினார்.

மேலே ஏறி உப்பரிகை சீட்டில் உட்கார்ந்த வண்டிக்காரன் ‘டிங், டிங்’ என்று காலை அழுத்தி மணி அடிக்க, குதிரைகள் . இரண்டும் முறித்து இழுத்து பீட்டனைக் கிளப்பிச் சென்றன.

ஓட்டுச்சார்பு இறங்கிய ‘போர்டிகோ’வுடன் பெரிய வீடு. வாசலில் ‘ஆர்ச்’ போல் வளைந்த கம்பிகளின் மீது மல்லிகைக் கொடி மண்டிக் கிடந்தது. ஆள் கதவைத் திறக்க, வர்தாச்சாரி சொகுசாகக் கீழே இறங்கினார்.

வாசலில் பாம்பாட்டி மகுடி ஊதிக் கூடை பெட்டியிலிருந்த சர்ப்பத்தைச் சீண்டி ரோஷம் உண்டுபண்ணினான். அது பெரிதாகப் படமெடுத்துச் சீறியது. உள்ளிருந்து மடிசார் மாமி அரிசி கொண்டு வந்து போட்டாள். தலையில் ஈரத்துணி சுற்றிக் கூந்தலோடு சேர்த்துக் கோடாலி முடிச்சுப் போட்டிருந்தாள்.

படிகள் ஒரம் செம்மண் இட்ட கோலம். வரி வரியாகப் போட்டிருக்க, வாசல் நடையில் ஏறினார் வரதாச்சாரி.

பாதி வெளிச்சமாய் ஒரு கூடம். பெரிய பெரிய கண்ணாடி பீரோக்கள். ஒரு பீரோ நிறைய கொலு பொம்மை.

தலைப்புப் புடைவையை இழுத்து மூடி, பேசரியும், அட்டிகையும் மின்ன கணவனைத் தொடர்ந்து கூடத்திற்கு வந்தாள்.

51

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிள்_பசி.pdf/54&oldid=1029464" இலிருந்து மீள்விக்கப்பட்டது