பக்கம்:ஆப்பிள் பசி.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

“பாலு மாமா கிட்ட போய் உதவி கேட்டேன். அவர் வக்கீல் மாமாகிட்டே போன்னு சொல்லிட்டார். நீங்க போய் போலீஸ்காரா எல்லாரையும் ஜயிச்சு சாமண்ணாவை இழுத்துண்டு வரணும்.” என்று மாமி பக்கம் திரும்பி, “வக்கீல் மாமா கிட்ட நீங்க சொல்லுங்க மாமி!”

“சொல்றேன். மாமாவுக்கு என்ன ஃபீஸ் தருவே!”

“எவ்ளோ வேணாலும் தருவேன். எங்கப்பா பீரோ நிறையப் பணம் வெச்சிருக்கார்!”

“சரி செய்யறேன். சர்மண்ணாகிட்டே உனக்கு ஏன் இத்தனை அக்கறை?”

“தெரியாதா மாமா! அவரைத்தானே நான் கல்யாணம் செஞ்சுக்கப் போறேன். அப்பா சொல்லிண்டிருந்தாரே!”

“அவன்தான் கொலை பண்ணிட்டு கேஸ்ல மாட்டிண்டிருக்கானே!”

“ஐயோ! அது அவர் செய்யலை மாமா! வேற ஆளு” தலையில் அடித்துக் கொண்டாள்.

“யாரு அது?”

“எனக்குத் தெரியும், முதல்ல நீங்க சர்மண்ணாவை ஜயிச்சுண்டு வாங்கோ, அப்புறம்தான் நான் அதைச் சொல்வேன்.”

வந்தது போலவே திரும்பினாள். வாசலை நோக்கி வேகமாகப் போனாள். வாசல் படிகளில் நொண்டி அடித்து இறங்கினாள். தெருவில் பாண்டி ஆடுவது போலக் குதித்துக் குதித்துப் போனாள்.

த்தியானம் மூணு மணிக்குச் சொல்லி வைத்தாற் போல் சாமண்ணா வந்தான். வாசலில், தென்னை மரத்தின் கீழ் பசு மாட்டைக் கட்டிக் கறந்து கொண்டிருந்தான் வேலைக்காரன்.

உள்ளே காப்பி களேபரத்தில் இருந்தாள் கோமளம். கூடத்தில் டிகாக்ஷன் மணத்தது.

வரதாச்சாரி தமது கருங்காலி மேஜை முன் உட்கார்ந்து, மறுநாள் கேசுகளின் பைல் பார்த்துக் கொண்டிருந்தார். கண்ணுசாமி இழுக்க, மேலே பங்கா ஆடியது.

“ஸார்” என்று அடங்கிய குரலில் அழைத்தான் சாமண்ணா. வரதாச்சாரி திரும்பிப் பார்த்தார்.

“வாப்பா!” என்றார்.

உள்ளே வந்தவன் உட்காராமல் பவ்யமாக நின்று கொண்டே இருந்தான்.

“உட்காரப்பா” என்றார்.

57

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிள்_பசி.pdf/59&oldid=1029471" இலிருந்து மீள்விக்கப்பட்டது