பக்கம்:ஆப்பிள் பசி.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அந்தப் புற்களைக் கை நிறைய அள்ளி மாட்டுக்கு முன்னால் போட்டதும், "இதோ வந்துர்ரேன் பாப்பா! இங்கேயே நில்லு என்று சொல்லிக் கொண்டே சரிவில் இறங்கி நடந்தான்.

.'அம்மாடி!' என்று பாப்பாவும் கீழே குதித்து மரத்துப் போன தன் கால்களைப் பிடித்துவிட்டுக் கொண்டாள்.

குமாரசாமி இதற்குள் மண் குடுவை ஒன்றில் நுரை ததும்பக் கரும்புச் சாறு கொண்டு வந்து, “இந்தா, வடி கட்டி வாங்கியாந்திருக்கேன்" என்று கொடுக்கவும் அதை ஆவலோடு வாங்கிக் குடித்த பாப்பா, நெஞ்செல்லாம் இனிக்குதப்பா. ' நீயும் கொஞ்சம் குடி!" என்றாள்.

"ஜாவாக் கரும்பாச்சே. அப்படித்தான் இனிக்கும்."

அதைக் குடித்து முடித்ததும், "புறப்படுவமா? டயம் என்ன ஆச்சு? இருட்டுக்கு முன்னாலே நகைக் கடைக்குப் போயிரணும்" என்றான். 'வாச்'சைப் பார்த்த பாப்பா "அஞ்சரை ஆகுது" என்றாள். அவள் எட்டாவது படிக்கும்போது அம்மா வாங்கிக் கொடுத்தது. இப்போது அம்மா இல்லை.

அந்த ஒற்றை மாட்டு வண்டி ஏறத்தாழ நகர எல்லைக்குள் வந்துவிட்டிருந்தது. சாலை மரத்து அக்கூ பட்சிகள் மழையைக் கூவி அழைத்துக் கொண்டிருந்தன.

“ரொம்ப இறுக்கமாயிருக்குதில்லே மழை வரும் போல்... என்று மகளிடம் சொல்லிக் கொண்டே, ஹய்...... ஹய் ...!" என்று வண்டியை வேகமாகச் செலுத்தினான்.

மெயின் ரோடு நாற்சந்தியில் ஐந்து லாந்தரைச் சுற்றி வண்டியைத் திருப்புகிறபோது முனிசிபல் தெரு விளக்குகள் மஞ்சளாய்ச் சிணுங்கின.

தைப்பூச விழாவோடு சந்தைக் கூட்டம் வேறு.

திடீரென்று அதிர்ந்த திருவிழா வேட்டுச் சத்தத்தில் மிரண்ட மாட்டை இழுத்துப் பிடித்தான் குமாரசாமி. வண்டியைச் சந்தை மைதானத்தில் கொண்டு நிறுத்தி தாழங்குடையையும் சோற்று மூட்டையையும் பத்திரப்படுத்திவிட்டு, "வாம்மா போகலாம்" என்றான்.

ஓரத்தில் புதுப் பானைகள் மலையாய்க் குவிந்து கிடந்தன. இன்னொரு பக்கம் சாம்பல் பூசணிக்காய்கள்.

காடா விளக்கு ஒளியில் கண்ணாடி வளையல்களைப் பரப்பிக் கொண்டு பட்டை நாமம் தீட்டியிருந்த வளையல் வியாபாரி தெலுங்கு பேசிக் கொண்டிருந்தார். சுவர் ஓரமாக அடுப்பு வைத்து மசால் வடை வேகும் வாசனை போவோர் வருவோரைச் சுண்டி இழுத்தது.

கைநிறைய வளையல்களை அடுக்கிக் கொண்டு, வாய் நிறைய மசால் வடையைத் திணித்துக் கொண்ட பாப்பா,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிள்_பசி.pdf/6&oldid=1027712" இலிருந்து மீள்விக்கப்பட்டது