பக்கம்:ஆப்பிள் பசி.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

-டிருந்தாள் சைனாக்காரன் ஒருவன் முதுகில் மூட்டையுடன் ‘சில்க்’ துணிகள் என்பதை வினோதமாய் ஒரு ஒலி எழுப்பிக் கூவிக் கொண்டு போனான்.

பள்ளிச் சிறுவர்கள் இரண்டு பேர் தெருவில் பாடிக் கொண்டு நடந்தார்கள்.

“ஆனா ஆவன்னா! அலேக் ராஜா சாமண்ணா!”

அதைக் கேட்டதும் கோமளத்துக்கு சாமண்ணாவின் நினைவு வர, சட்டென்று உள்ளே போய் வரதாச்சாரியைப் பார்த்து, “ஏன்னா! அப்புறம் சாமண்ணா கேஸ் என்னாச்சு! எல்லாம் கப்சிப்புனு இருக்கே! சாமண்ணா ஊர்லதான் இருக்கான்? நாடகம் கீடகம் நடக்குமா, நடக்காதா?“ என்று கேட்டாள்.

வரதாச்சாரி பருமனான ‘லா’ புத்தகத்தை மடக்கி நகர்த்தி வைத்துக் கொண்டே, “கேஸ் என்னடி கேஸ்! கொலை நடந்த அன்னைக்கு சாமண்ணா ஊர்லயே இல்லையே! இன்ஸ்பெக்டர் முனகாலா மூக்கு உடைபட்டுப் போனான் தெரியுமோ? சாமண்ணாவைப் பத்தி என்னவோ இல்லாததும் பொல்லாததுமாய் பேசினான். பொய்க் கேஸ் ஜோடிக்கிறதுலே அவன் பெரிய புலியாச்சே! ஆனா அந்தப் புலி என்கிட்டே வாலாட்ட முடியலை. அவ்வளவையும் தகர்த்தெறிஞ்சுட்டேன். முனகாலாவுக்கு யாரையாவது இப்ப இந்தக் கேஸ் சம்பந்தமா அரெஸ்ட் பண்ணி ஆகணும். பாவம், கிடந்து திண்டாடறான்.”

“அது சரி; சாமண்ணா என்ன ஆனான்? அப்புறம் அவனைக் காணவே காணமே! மறுபடியும் நாடகம் நடத்தப் போறாளாமா? இல்லை, இனி நடக்கவே நடக்காதா?” என்று வருத்தப்பட்டாள்.

வரதாச்சாரி பேசவில்லை.

“வாயை மூடிண்டு பதில் சொல்லாம இருந்தா எப்படி? பாவம், அந்த சாமண்ணாவை நினைச்சா எனக்கு ரொம்ப வருத்தமாயிருக்கு. அந்த அப்பாவிப் பையனைப் பார்த்தா கொலை பண்ணினவன் மாதிரியா இருக்கு! அவன் முகத்திலே தேஜஸ் ஜொலிக்கிறதே! அவனுக்கு ஏதாவது ஒரு வழி பண்ணுங்கோ ஒரு நல்ல வாழ்க்கை அமைச்சுக் கொடுங்கோ.”

கோமளம் கொஞ்சம் தாங்கலோடு ஊஞ்சலில் போய் உட்கார்ந்தாள்.

“வாப்பா, வா! உனக்கு ஆயுசு நூறு” என்ற வரதாச்சாரியின் குரல் கேட்டுத் திரும்பினாள். இரண்டாம் நிலை வாயிலின் வழியே சற்று இளைத்துப் போன உருவம் உள்ளே நுழைந்தது. “உள்ளே போ. உன்னைப் பார்க்கவே முடியலையேன்னு மாமி தவிச்சுண்டிருக்கா. உன். கேஸ் என்ன ஆச்சுன்னு ரொம்பக் கவலைப்படறா” என்று வக்கீல் சொல்ல, வருவது சாமண்ணா என்று தெரிந்ததும், கோமளத்தின் முகம் பிரகாசமாயிற்று.

சாமண்ணா கைகூப்பி நின்றான். “வா. வா, உட்காரு, உட்காரு” என்று மாமி இரண்டு முறை ஆர்வத்தோடு அழைத்த-

65

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிள்_பசி.pdf/66&oldid=1029579" இலிருந்து மீள்விக்கப்பட்டது