பக்கம்:ஆப்பிள் பசி.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



பன்னீர் மலை, பூவேலிக்கு வடமேற்கில் மூன்று மைல் தள்ளி உள்ள முருகன் ஸ்தலம். பன்னிருகை வேலன் கோயில் பிரசித்தமானது. வேலனின் ஒவ்வொரு கையிலும் சம்ஹாரக் கருவிக்குப் பதிலாக யாழ், குழல் போன்ற இசைக் கருவிகள் இருந்தன.

இதனால்தானோ என்னவோ அங்கே ஆண்டுதோறும் ஆடிமாதக் கடைசி வார வெள்ளிக்கிழமையில் பெரியவர், சின்னவர் என்ற வித்தியாசமில்லாமல் சுற்று வட்டாரக் கலைஞர்கள் எல்லோரும் ஒன்றுகூடி, இருபத்து நாலு மணி நேரமும் பெரிய விழாக் கொண்டாடுவார்கள்.

சிம்மப்பாதையிலிருந்து தாசிகுலக் கன்னிகைகள் சதிர் ஆடிக் கொண்டு அபிஷேகத்திற்குத் தீர்த்தம் கொண்டு வரும் காட்சியைப் பார்ப்பதற்கென்றே அக்கம் பக்கத்துக் கிராம் மக்கள் அத்தனை பேரும் கூடி விடுவார்கள்.

வக்கீல் வரதாச்சாரியும் அவர் மனைவி கோமளம்மாளும் வழக்கம்போல் அந்த வருட விழாவுக்கும் வந்திருந்தார்கள்.

மொட்டையாக நின்று கொண்டிருந்த தேர்ச் சப்பரத்துக்கு அருகே வரதாச்சாரியின் பீட்டன் வண்டி வந்து நின்றது.. வாதாச்சாரிக்கு ஏக வரவேற்பு. கோயில் நிர்வாகிகள் அவரை முதல் வரிசைக்கு அழைத்துப் போய் உட்கார வைத்தார்கள். மஞ்சள் நீராடி, புதுசு உடுத்தி, பளீர் பளீர் என்று கன்னிகைகள் வெள்ளிக்குடத்தில் நீர் மொண்டு ஊர்வலமாகக் கோயிலுக்குள் போவதைக் கோமளம்மாள் மட்டும் வண்டியிலிருந்த படியே பார்த்துக் கொண்டிருந்தாள்.

72

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிள்_பசி.pdf/72&oldid=1029587" இலிருந்து மீள்விக்கப்பட்டது