பக்கம்:ஆப்பிள் பசி.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

“இல்லை மாமி” என்று சொல்லும் போதே ஒரு பெருமூச்சு வந்து அவளது உண்மை நிலையைக் காட்டியது.

“ஏதாவது மனசுலே இருந்தாச் சொல்லிடு. எங்க ஆத்துக்காரர் உங்க குடும்ப வக்கீல் இல்லையா? உங்களுடைய சுகதுக்கத்துல எங்களுக்கும் பங்கு உண்டே! நீ எதையும் என்கிட்டே மனம் திறந்து பேசலாம்!” என்றாள் கோமளம்.

“இல்லை மாமி! அவரை நான் பார்த்தேன்.”

“யாரு, சாமண்ணாவையா?”

“ஆமாம்.”

“அவர் என்னைப் பார்த்தும் பார்க்காத மாதிரி போயிட்டார். மனசு சுக்கலாப்போச்சு. அப்படி நான் என்ன மாமி இவருக்குத் தப்புச் செய்தேன்? நான் வந்திருக்கேன்னு தெரிஞ்சு, மத்த நாடகக்காரர்களெல்லாம் ஒரு அபிமானத்துக்கு என்னை வந்து பார்த்துட்டுப் போனா. எங்க அம்மா காலத்திலே இவர்களுக்கெல்லாம் எவ்வளவு செஞ்சிருக்கோம் தெரியுமா? அந்தப் பழைய விசுவாசம். இவருக்கு என்னைப் பிடிக்கலைன்னா பிடிக்காமப் போகட்டும். அதுக்காகப் பார்த்த கண்ணை இப்படியா வெட்டி முறிச்சு வேறு பக்கம் திருப்பிட்டுப் போகணும்?”

“அழாதேம்மா, இதுக்கெல்லாம் கண் கலங்கலாமோ?” என்று மாமி அவளைத் தேற்றினாள்.

“நாடகத்திலே இவர் நடிப்பையும் ரூபத்தையும் பார்த்து மயங்கிப் போனேன். எதேச்சையா அன்னைக்கு ஒரு நாள் நாங்க இவர் வீட்டுக்குப் போனப்போ ரொம்ப அக்கறை காட்டி. அன்பாகப் பழகினார். இப்ப திடீர்னு அவருக்குப் பிடிக்கலை போல இருக்கு. போனாப் போகட்டும், யாரும் வற்புறுத்தலையே!"

ஸ்திர புத்தி இல்லாம் இருக்காண்டி அவன். என்னென்னவோ பேசுறான். கேஸ் வேறே குழப்பிட்டுதா! கொஞ்ச நாள் போகட்டும்; எல்லாம் சரியாப் போயிடும். நான் அவனுக்குப் புத்தி சொல்லிண்டுதான் இருக்கேன். நான் சும்மா விடப் போறதில்லை அவனை. இப்படியா ஒரு பெண்ணை வயிற்றெரிச்சல் கொட்டிக்கிறது?” என்று சற்று ஆவேசமாகப் பேசினாள் கோமளம்..

“நான் அப்படி என்ன கொடுமை பண்ணிட்டேன்? ஏன் இப்படி நடந்துக்கிறார்? நினைக்க நினைக்க இதயமே வெடிச்சுடும் போல இருக்கு மாமி!”

தலைப்பை எடுத்து முகத்தைத் துடைத்துக் கொண்டாள்.

“இந்தா பாப்பா! சின்னக் குழந்தையாட்டம் அழாதே! எதுக்கு அழணும்? அவன் போனாப் போறான். விட்டுத் தள்ளு, நன்றிகெட்டவன்! நீ மட்டும் வக்கீல் மாமாகிட்டே சிபாரிசுக்கு வரலைன்னா இவன் இந்தக் கேஸ்லேருந்து தப்பி வெளியே வந்திருக்க முடியுமா? போலீஸ் இன்ஸ்பெக்டர் முனகாலா

74

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிள்_பசி.pdf/74&oldid=1029625" இலிருந்து மீள்விக்கப்பட்டது