பக்கம்:ஆப்பிள் பசி.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சும்மா விட்டிருப்பாரா? முட்டியைப் பெயர்த்துட்டுத்தானே, வெளியிலே அனுப்பிச்சிருப்பார்! கொஞ்சமாவது. நன்றி இருக்கா? உன்கிட்டே நேரிலே ஒரு வார்த்தை சொல்ல வேணாமோ? எங்கிட்டே சொல்லி என்ன பிரயோசனம்? வரட்டும்! வரட்டும்” என்று கறுவினாள் மாமி.

“ஐயோ, மாமி! கோபப்பட்டு அவரை எதுவும் உங்க வாயாலே சொல்லிடாதீங்க. சாபம் கொடுத்துராதீங்க. பெரியவங்க வாக்குப் பலிச்சுடும். அவர் எப்படி வேணா இருந்துட்டுப் போகட்டும். ஆனா அவருக்கு எந்தக் கெடுதலும் வரக் கூடாது. அவர் நன்னாயிருக்கணும். நான் உதவி செஞ்சது உங்களுக்கும் எனக்கும் தெரிஞ்சாப் போதும். இப்பவும் அவருக்கு நான் ஏதாவது செய்யணும்னுதான் நினைக்கிறேன்! இந்தச் சிங்காரப் பொட்டுக்காரர் ஒவ்வொரு பெரிய மனுஷாளாய்ப் பார்த்து சகாயம் கேட்கிறார். அவர் பின்னாலே இவர் அலையறார். இவர் ஏன் போகணும்? தலையெழுத்தா இவருக்கு? சொல்லுங்கோ. என்னை அவர் பார்க்க வேண்டாம். என்கிட்டே பேச வேண்டாம். தூரத்திலேயே இருந்துக்கட்டும். ஒரு வார்த்தை சொல்லி விட்டிருந்தா இவருக்கு நான் ஒரு டிராமாக் கம்பெனியே ஆரம்பிச்சு கொடுத்திருப்பேனே!”

“ஐயோ பாப்பா! திருப்பித் திருப்பி ஏன் புலம்பறே? அவனை விடு! உனக்கு ஏன் இப்படி துக்கம் பீறிப் பீறிண்டு வர்றது? அவன் ஏதோ புத்தி தடுமாறிப் போயிருக்கான். நாலு இடத்திலே போய் முட்டிக் கொண்டு வரட்டும். பட்டால்தான் தெரியும் அவனுக்கு.”

“மாமி! நீங்க எனக்கு ஒரு உபகாரம் பண்ணுவீங்களா?”

“என்ன செய்யணும் சொல்லு?”

“நான் அவருக்கு எப்படியாவது, எந்த விதத்திலாவது உதவியாயிருக்கணும்னு நினைக்கிறேன். இப்ப அவருக்கு அது தெரிய வேண்டாம். பின்னாடி அவர் தெரிஞ்சுக்கிட்டு மனம் மாறி என்கிட்ட வரணுங்கிறதுக்காக இல்லை. சத்தியமா அந்த எண்ணம் இல்லை. ஒரு நல்ல நடிகர் வாழ, நான் உதவணும்னு தான் மனப்பூர்வமா விரும்பறேன். அதுக்காகத்தான் உதவி செய்யணும்னு நினைக்கிறேன். அதுக்கு இந்த அனாதைக்கு ஒத்தாசை செய்யணும்.”

“ஏன் இப்படியெல்லாம் பேசறே? அனாதைன்னு சொல்லிக்காதே! உனக்கென்ன குறைச்சல்? அப்படி அனாதை ஆக நாங்க ளெல்லாம் விட்டுற மாட்டோம். என்ன செய்யணும் சொல்லு!”

“அவர் கஷ்டப்படக் கூடாது மாமி! அதுதான் நான் வேண்டிக்கிறது, நீங்கதான் அவரைக் காப்பாத்தணும். அவருக்கு என்ன உதவி தேவைப்பட்டாலும், எவ்வளவு பணம் வேணும்னாலும் நீங்களே கொடுத்து உதவுங்க. நான் அதையெல்லாம் உங்களுக்குத் தந்துடறேன், ஆனா, நான்தான் இதெல்லாம் செய்யறேன்னு அவருக்குத் தெரிய வேண்டாம்.

75

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிள்_பசி.pdf/75&oldid=1029629" இலிருந்து மீள்விக்கப்பட்டது