பக்கம்:ஆப்பிள் பசி.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வக்கீல் வரதாச்சாரி ஐந்து நிமிடம் தாமதமாக வந்தார். அவரை வரவேற்க நாலைந்து பேர் வாசலுக்கு ஓடினார்கள். இரண்டு முக்கிய நிர்வாகிகள் அவரை வரவேற்று, முன் வரி சைக்கு அழைத்துச் சென்று அமரச் செய்தனர்.

“உங்க ஆசீர்வாதத்தாலும் உதவியாலும் இந்தப் புதிய நாடகக் கம்பெனியைத் தொடங்கி இருக்கோம்” என்றார் நிர்வாகிகளில் ஒருவர்.

கோமளம் வைரச் சிரிப்போடு உடம்பில் ஜரிகையும், தங்கமும் மின்ன பணக்கார தோரணையுடன் வந்திருந்தாள்.

அடுத்தாற்போல் டி. எஸ். பி. மனைவி ஏக அமர்க்களமாக உள்ளே நுழைந்தாள்.

டி. எஸ். பி. நாராயணசாமி ஜிப்பா போட்டு, குதப்பிய வெற்றிலையுடன் விசிறிமடிப்பு அங்கவஸ்திரத்தில் ஒருகலியாண வீட்டு விருந்தாளி போல் காணப்பட்டார்.

அடுத்தபடி தாசில்தார், பிறகு மிட்டாதார். மிராசுதார், பக்கத்து ஜமீன் எல்லாருமே ஒவ்வொருவராய் வந்து இறங்கினர்.

இந்த ஆர்ப்பாட்ட வைபவங்களிடையே மெல்லிய தென்றல் உள்ளே வருவது போல் பாப்பா வந்து கொண்டிருந்தாள்.

அவளைக் கண்டதும் அத்தனை ஆண்களின் மூச்சும் தடைப்பட்டு நின்றன. பெண்கள் அவளைப் பொல்லாக் கண்களோடு பார்த்தார்கள்.

அத்தனை பேருக்கும் தன் அபிநயக் கைகளால் அழகாகக் கும்பிடு போட்டு அடக்கமாகப் பின் வரிசை நாற்காலி ஒன்றில் போய் உட்கார்ந்து கொண்டாள்.

கண்பதி ஸ்தோத்திரப்பாடல் இசைவெள்ளமாய்ச் சபையை நிறைக்க திரை சுருண்டு சுருண்டு மேலே போக, அத்தனை கண்களும், ‘அடுத்தது என்ன?’ என்பது போல் ஆவலோடு நோக்கின.

சிவலிங்கத்திற்குப் பத்மாவதி பூஜை செய்யும் முதல் காட்சி ஆரம்பமாயிற்று.

‘கர்ணா -- அர்ச்சுனா’ நாடகம்.

“மகேசுவரா! என் மனோரதம் என்று பூர்த்தியாகும்? உம்முடைய கிருபையினால்தான் நான் என் மனதுக்குகந்த மணாளனை என்று பெறுவேன்? என் ஜீவியத்தையும், யௌவனத்தையும் நான் யார் பாதங்களில் அர்ப்பணம் செய்யப் போகின்றேன்?” இந்த நீண்ட வசனத்தைத் தொடர்ந்து ஆனந்தபைரவியில் ஒரு சுலோகம்.

பாப்பா பலமாகப் பெருமூச்சு விட்டாள். அவள் கண்கள் கலங்கியிருந்தன, பத்மாறாள்? பாப்பா தன்னையே பத்மாவதியாக எண்ணிக் கொண்டாள்.

78

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிள்_பசி.pdf/78&oldid=1029634" இலிருந்து மீள்விக்கப்பட்டது