பக்கம்:ஆப்பிள் பசி.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

“கண்டிஷனா? வக்கீல் மாமா சும்மா கொடுத்துடுவாரா? பத்திரம் கொண்டுவந்து கையெழுத்து வாங்கினப்புறம்தான் பணம் கொடுத்திருக்கார். இப்போ மாமா எதுக்கு வெளியிலே போயிருக்கார்னு தெரியுமா?”

“எதுக்கு?

“இன்னிக்கு வசூல் கணக்கைப் பார்க்கத்தான்.”

பாப்பாவுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. வரதாச்சாரி இவ்வளவு தூரம் அக்கறை எடுத்துக் கொண்டிருப்பது அவளுக்கு ஆறுதலாயிருந்தது.

தணிந்த குரலில், “மாமி! நான் பணம் கொடுத்த விஷயம் யாருக்கும் தெரியாதே?” என்று கேட்டாள்.

“மூச்! ஒரு வார்த்தை வெளியில் போகாது!”

“சிங்காரப் பொட்டுவுக்குக் கூட நீங்கள் கொடுக்கிறதாத்தானே சொல்லியிருக்கீங்க?”

“ஆமாம், நாங்க ஒருத்தர்தான் கொடுத்தோம்னு சொன்னா சந்தேகப்படுவாரேன்னு நாலு பேர் சேர்ந்து பணம் போட்டிருப்பதாகச் சொல்லி வச்சிருக்கோம்.”

“என்னவோ! எல்லாம் நல்லபடியா நடக்கணும். அதோ மாமா வரார்! நான் என் ஸீட்டுக்குப் போறேன்.”

பாப்பா எழுந்து தன் இடத்துக்குப் போய் விட்டாள். வரதாச்சாரி வந்து உட்கார்ந்ததும் கர்ணன் வேடம் பூண்டிருந்த சிங்காரப் பொட்டு மேடையிலிருந்து கீழே இறங்கி வந்து, “வக்கீல் ஸார்தான் எங்களுக்கு ஆதரவு திரட்டி இந்த நாடகக் கம்பெனியை ஆரம்பிச்சு வைத்தவர். அவருக்கும் அவர் நண்பர்களுக்கும் எங்கள் நன்றியைச் சொல்லி இந்த மலர் மாலையை அவருக்குச் சூட்டுகிறேன்” என்று கொஞ்சம் நாடகத் தமிழ் பேசி மாலையைச் சூட்டினார்.

பாப்பாவுக்கு இதெல்லாம் மகிழ்ச்சியாக இருந்த போதிலும் சாமண்னவை அதுவர மேடையில் காணவில்லையே என்ற கவலையும் ஒருபுறம் வாட்டிக் கொண்டிருந்தது. திரை உயர்ந்து, கையில் வில்லுடனும் கிரீடத்துடனும் பட்டு பஞ்சகச்சத்துடனும் வந்த அதி ரூப சுந்தரனைப் பார்த்ததும் பாப்பாவுக்குப் பக்கென்று நெஞ்சு அடைத்தது.

மத்யமாவதியில் கம்பீர எடுப்புடன் தித்திக்கும் சாரீரத்தில் பாடிக் கொண்டு சபையை பிரமிக்க அடிப்பவர் யார்?

அடி வயிற்றிலிருந்து ஒரு இன்ப உணர்வு அவள் அங்கமெல்லாம் பாய்ந்தது.

ஏற்கெனவே தாபம் கொண்டவள், இப்போது தாபம் மிகையாகிவிட ஒரு நீண்ட வெப்பப் பெருமூச்சு விட்டு, சாமண்ணாவைத் தன் காதல் நிறைந்த கண்களால் விழுங்கிக் கொண்டிருந்தாள்.

‘ஆகா! சாமண்ணு எத்தனை அழகு! என்ன ராஜகம்பீரம்! இத்தனை நாளும் இவர் பொருத்தமில்லாத கோமாளி வேடம் போட்டுத் தன் நாடக வாழ்க்கையையே பாழாக்கிவிட்டாரே!’

82

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிள்_பசி.pdf/81&oldid=1029637" இலிருந்து மீள்விக்கப்பட்டது