பக்கம்:ஆப்பிள் பசி.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உள்மனம்: ‘நீ நிற்பதை அவர் கவனிக்கவில்லை பாப்பா! ஏன் ஆத்திரப்படுகிறாய்? கவனித்திருந்தால் பேசாமல் இருப்பாரா?’

பாசம் வைக்கிறவர்களுக்கு அதன் விளைவாக நேரும் துன்பங்கள் நிறையப் பிடிக்கும். அதுவும் பாசத்துக்கு உரியவரிடமிருந்தே அந்தத் துன்பம் வரும்போது அதை ரசிக்கவே செய்வார்கள்.

பாப்பா இரவு பூராவும் சாமண்ணாவின் அலட்சியப் போக்கை நினைத்து மருகினாள். “என்னைப் பார்க்கவே இல்லை. என்னிடம் பேசவே இல்லை” என்று தனக்குத் தானே திரும்பத் திரும்பச் சொல்லிப் புலம்பினாள்.

பொழுது விடிந்ததுதான் தாமதம். குளித்துச் சாப்பிட்டு முடித்தவுடன் அப்பாவிடம் வண்டியைத் தயார் பண்ணச் சொல்லி வக்கீல் வீட்டுக்குப் புறப்பட்டாள்.

வெயில் சுள்ளென்று உரைத்தது. வரதாச்சாரி மனைவி கோமளம் கையில் ஆரணி குப்புசாமி முதலியார் எழுதிய ‘தேவ சுந்தரி’ கனத்துக் கிடக்க,

அதில் வரும் தேவசுந்தரி, தனது கற்பைக் காப்பாற்றிக் கொள்ளும் இக்கட்டு நிலையில் இருந்து கொண்டு, கெட்ட எண்ணத்தோடு வரும் ஜெகந்நாதனிடம்,

“ஐயா! நீர் உயர் குடியில் பிறந்தவராய் இருந்தும் இம்மாதிரி அனாதையாகிய ஒரு ஸ்திரீயை அவமானம் செய்வது நீதியாகுமா? நீர் உடனே என்னைப் போகும்படி விட்டு விடவில்லையெனில் நான் உதவி கோரிக் கூச்சலிடுவேன்” என்று சொல்லிக் கொண்டிருக்க,

வாசலில் குதிரை வண்டியிலிருந்து பாப்பாவும் குமாரசாமியும் இறங்குவதைப் பார்த்ததும், படித்த இடத்திற்கு அடைளாயக் குறியாய்த் தனது மூக்குக் கண்ணாடிக் கூட்டை வைத்து விட்டு, “வா, வா” என்று பாப்பாவை வரவேற்றாள்.

குமாரசாமி பாப்பாவைப் பார்த்து, “நீ உள்ளே போம்மா. நான் அரை மணியில் திரும்பி வந்துடறேன்” என்று சொல்லி வண்டியோடு புறப்பட்டுப் போய் விட்டான்.

பாப்பா! வந்து ஊஞ்சலில் சுவாதீனமாக உட்கார்ந்தாள்.

“பாப்பா நீ வருவேன்னு எனக்குத் தெரியும்! எதிர்பார்த்துண்டேதான் இருந்தேன்” என்றாள்.

“அதெப்படி தெரியும் உங்களுக்கு?” எனக் கேட்டாள் பாப்பா.

“எப்படியோ! நேத்தே ஊகிச்சுட்டேன். நான் தகிச்சது சரியாப் போச்சா, இல்லையா?”

“நேத்திக்கு நடந்ததைப் பார்த்தேளா மாமி?” என்று பாப்பா ஆரம்பிக்க,

88

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிள்_பசி.pdf/85&oldid=1029648" இலிருந்து மீள்விக்கப்பட்டது