பக்கம்:ஆப்பிள் பசி.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கேள்வியைக் கேட்டு ஊஞ்சலில் சட்டென்று உட்கார, ஆரணி முதலியார் தொப்பென்று கீழே விழுந்தார்.

சாமண்ணா வெலவெலத்து நின்றான். உயிர் ஆழத்தில் ஒரு கேள்வி கேட்ட மாதிரி இருந்தது அது. அவனையே கலக்க வைக்கும் கேள்வி.

அவன் தவிப்பதைப் பார்த்து, “உட்காரு சாமண்ணா! உட்காத்துக்க!” என்று கோமளம் சொன்னதும் தட்டுத் தடுமாறி உட்கார்ந்தான் சாமண்ணா.

“மாமி! வாழ்க்கையிலே எல்லாம் நம்பிக்கைதானே!” என்றான் சுருக்கமாக.

“என்ன நம்பிக்கை வச்சிருக்கே, சொல்லு!” என்றாள் கோமளம்.

“நாடகத்திலே நடிச்சுப் பெரும் புகழ் வாங்கி, பெரிய ஹீரோவாயிடலாம்னுதான்!”

“கடவுள் உனக்கு அனுக்கிரகம் செய்யட்டும். ஆனா இந்தத் துறையிலே லேசா யார் அப்படி ஹீரோவாகி, எத்தனை லட்சம் சேர்த்துட்டா சொல்லு.

சாமண்ணா திகைத்தான்.

“சேர்த்திருக்க முடியும் மாமி! ஆனா நாலு காசு வரதுக்குள்ளதான் குடியிலேயும், கூத்தியிலேயும் இறங்கிடறாளே!”

“பால்லாத்தையும் இழந்துட்டா இல்லையா?”

“ஆமாம்.”

“சரி! எத்தனை நாடகக் கம்பெனி ஒழுங்கா இருக்கு. அதைச் சொல்லு. ஒரு கம்பெனி எத்தனை காலம் வாழ்ந்திருக்கு?”

சாமண்ணா மனக்கண் முன்னால் ஒரு காலத்தில் கொடி கட்டிப் பறந்த நடிகர்கள், நடிகைகள், பாட்டுக்காரர்கள், உரிமையாளர்கள், மானேஜர்கள் எல்லாருமே இன்று அன்னக்காவடிகளாக அலைந்து கொண்டிருப்பதைப் பார்த்தான்.

மாமி சொல்வது எவ்வளவு உண்மை!

ஆனாலும் அதை அவன் மனம் ஏற்றுக் கொள்ளவில்லை.

மழபாடி மகாதேவன் பிரமாதமாக வாழவில்லையா?

இன்றைக்கு ஏராளமாய் நிலம் வாங்கி, ஊரையே வளைத்துப் போட்டிருக்கிறானே!

சாமண்ணாவுக்கு உதடுகள் துடித்தன.

“ஏன், மாமி! என் வாழ்க்கை வித்தியாசமா இருக்காதா? எங்க அம்மா உயிரோடு இருந்தப்ப என் சின்ன வயசிலே எனக்கு ஆயிரம் தடவை ஆசீர்வாதம் பண்ணியிருக்கா. அதெல்லாம் வீண் போகாது, நான் ஒரு நாளைக்கு நிச்சயம் பெரிய நடிகனாகத்தான் போகிறேன். பேரும், புகழும், பணமும் தவிக்கப் போகிறேன். அதையெல்லாம் பார்க்க எங்கம்மாவுக்குத்தான் கொடுத்து வைக்கல்லே, நீங்க அவள் ஸ்தானத்துலே இருந்துண்டு பார்க்கத்தான் போறீங்க.”

“சரி! அப்படி நீ பேரும், புகழுமாக வளரணும்னா அதுக்கும் யாராவது ஒருத்தருடைய உதவி இருந்தாத்தானே முடியும்?”

கோமளம் தன்னை மடக்கி மடக்கிப் பேசிய விதம் அவனுக்குத் திகைப்பாக இருந்தது.

93

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிள்_பசி.pdf/92&oldid=1029678" இலிருந்து மீள்விக்கப்பட்டது