பக்கம்:ஆப்பிள் பசி.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



சாமண்ணா சிறிதுநேரம் பிரமித்து நின்றான். கோமளத்தின் அசைக்க முடியாத வாதங்கள் அவனுடைய அடித்தள நம்பிக்கையை அசைத்து விட்டன. கண்களில் அவனது அம்மா மின்னி மறைந்தாள். விசாலாட்சி என்று பெயர். ஒரு காலத்தில் விசாலமாக இருந்த அவள் கண்கள் வயது அறுபத்தைந்தை எட்டிய போது, ஊட்டம், ஆதரவு எல்லாம் இழந்து அவளது அடிப்படை ஆசை குறுகியது போல் கண்களும் குறுகிவிட்டன. வெறும் காலடி ஓசையை வைத்தே -- “சாமு. வந்துட்டியாடா!” என்பாள். சாமண்ணா அவளைப் பொறுத்த வரை ஒரு நிழல் தான். அவன் கால், கை, முகம் எல்லாம் சேர்ந்து ஒரு குழப்பமான நிழலாகத் தெரியும்.

ஆப்ரேஷன் செய்து கண்ணாடி போட்டால் கண் தெரியுமாம். ஆனால் நூறு ரூபாய் செலவாகுமே! எங்கே போவது பணத்துக்கு? அதுவும் சாமண்ணா படிப்பு கிடிப்பு எதுவும் வராமல் வெறும் வெட்டிப் பொழுது போக்கிக் கொண்டிருக்கும்போது? அவள் இறந்து போவதற்கு முன் அவளுக்குக் கண் கொடுக்க முடிந்ததா? தன் பிள்ளையின் உருவத்தைப் பார்த்து மகிழ அவளுக்குக் கொடுத்து வைத்திருந்ததா?

“என்ன பிரமிச்சுப் போய் நிற்கிறே?” என்று வக்கீல் மாமி கோமளம் சீண்டியவுடன் சாமண்ணா தத்தளித்து நிஜ உலகுக்கு வந்தான்.

“நீங்க சொல்றதை எல்லாம் ஒத்துக்கறேன் மாமி! வாழ்க்கையிலே முன்னேறணும்னா நாலு பேர் ஆதரவு வேண்டி யதுதான். நான் அதை மறுக்கலே. ஆனா அங்க அம்மாவை

94

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிள்_பசி.pdf/93&oldid=1029681" இலிருந்து மீள்விக்கப்பட்டது