பக்கம்:ஆப்பிள் பசி.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உத்தேசித்து இந்த விஷயத்திலே என்னாலே எதுவும் செய்ய முடியாத நிலை. அதனால்தான்...”

“அப்படி என்ன நிலை? பெரிய நிலை! சொல்லு!” என்றாள் கோமளம்.

சாமண்ணா சற்று கலங்கி நின்றான். மனசுக்குள் ஓர் உணர்வுப் பிரளயம் நடந்து கொண்டிருந்தது.

கர்ணனை அண்ணன் என்று அறிந்த போது நிஜ அர்ச்சுனனுக்குக் கூட அந்த அளவுக்குச் சோகம் தோன்றியிராது.

“கேளுங்கோ மாமி!” என்றான். குரலில் விசேஷ அக்கறை தொனித்தது.

“எங்க அப்பாவுக்கு லட்சுமிநாராயணன்னு பேரு. தாத்தா நிறைய சொத்து வச்சுட்டும் போனார். அத்தனையும் திண்ணையிலே சீட்டாடியே தோத்துட்டார், தாத்தா சேர்த்து வைத்ததை மட்டுமில்லை, அம்மா தொங்கத் தொங்க நூறு பவுன் நகையோடு வந்தா; அதையும் சீட்டாடியே விட்டாச்சு! ஒரு பக்கம் வாதம் இழுத்துப் படுக்கையிலே படுத்துட்டார் பாருங்கோ. அப்போதான் என் அம்மா கையைப் பிடிச்சுண்டு அழுதார். பேச முடியவில்லை. அம்மாவோட அருமை அப்பத்தான் தெரிஞ்சுது. ஆனாலும் அம்மா அவரைத் தவிக்க விடவில்லை,. ரெண்டு வருஷம் நாயா உழைச்சு அவரைக் காப்பாத்தினா. அப்பா அழுதுண்டே கண்ணை மூடினார்.

அப்ப எனக்குப் பத்து வயசு. அப்பா போன கையோடு பிடிவாதம், கோபதாபம் எல்லாம் வந்துடுத்து. படிப்பு மட்டும் ஏறல்லை. தத்தாரிகளோடு அலைஞ்சேன். அம்மாவுக்கு ரொம்ப வருத்தம்.

அப்பப்ப எனக்கு புத்தி சொல்லி திருத்தப் பார்ப்பா. அடம் பிடிப்பேன். அழுவேன். சொல் பேச்சைக் கேட்க மாட்டேன். பேசாம இருந்துடுவா! ரெண்டு வருஷம் என் உதாசீனத்தைப் பொறுத்துண்டிருந்தா. ஒருநாள் குடத்துல தண்ணி எடுத்துட்டு வீட்டுக்கு வரும்போது கீழே விழுந்துட்டா. நான் அன்று தெருக்கூத்து பார்த்துட்டு காலையில வந்து பார்க்கிறேன். வீடு திறந்திருக்கு. இருட்டா இருக்கு. அம்மா அம்மான்னு உள்ளே போறேன்.

அம்மா விழுந்த இடத்திலேயே கிடக்கிறார். முனகறா! எழுந்திருக்க முடியலை. தூக்கி வாரி எடுத்தேன். உள்ளே கொண்டு படுக்க வச்சேன். உள்ளூர் வைத்தியனை அழைச்சுண்டு வந்து, காண்பிச்சேன். பயன்படலே. நம்பமாட்டீங்க! அம்மா ஒரு. வாரம் படுத்துக்கிட்டே சமையல் செய்தாள். கும்மட்டியைப் பக்கத்திலே வச்சுண்டு.....

(சாமண்ணாவுக்கு இப்போது கண்ணீர் வந்தது.)

அப்பவாவது அனுசரணையா இருந்தேனா! இல்லை; என்

95

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிள்_பசி.pdf/94&oldid=1029684" இலிருந்து மீள்விக்கப்பட்டது