பக்கம்:ஆப்பிள் பசி.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பணிவிடைகளை அவள் எதிர்பார்த்தாளா? அதுவுமில்லை. பத்து நாளைக்கு அப்புறம் ஒருநாள் தானே எழுந்து உட்கார்ந்துட்டா.

அதுக்குப் பிறகு ஒரு வருஷம் இருந்திருப்பாளோ என்னவோ, எப்படியோ நாளை ஒட்டிண்டே வந்துட்டா.

ஒருநாள் அம்மா திருப்பதிப் பெருமாள் படத்துகிட்டே பேசிண்டு இருக்கச்சே கேட்டுட்டேன்! ‘பெருமாளே! என்னைப் பலவீனமாக்கறே! சரி! என் பிள்ளையை யார் அப்புறம் கவனிச்சுப்பா? அவனும் படிக்காமல், உலகம் தெரியாமல் இருந்துட்டானே, நாளுக்கு நாள் முடியாமப் போறதே. நான் கண் மூடறதுக்கு முன்னாடி நீதான் அவனுக்கு ஒரு வழி காட்டணும். என் அப்பனே!’

அம்மா பேசினப்புறம் நான் பக்கத்திலே போய் நிற்கிறேன். கண் தெரியலை. என்னைப் பார்க்காமலே அந்தப் பக்கமாப் போனா ‘அம்மா’ன்னேன். அப்போதுதான் திரும்பி என்னைச் சூன்யமாப் பார்த்தார். ஒரு வருஷமா பார்வை குறைஞ்சு போயிருக்கு. அதை என்கிட்டே சொல்லவே இல்ல. நிழலாத்தான் நீ தெரியறே'ன்னு சொன்னவுடனே எனக்குத் துக்கம் தொண்டையை அடைச்சுது. காரணம், அப்பத்தான் நான் முதல் முதல் சம்பாதிச்சுப் பணம் கொண்டு வந்திருந்தேன். நாடகக் கம்பெனியிலே சேர்ந்திருந்தேன். பக்கத்து டவுன்லே, கிருஷ்ண லீலாவிலே நடிச்சுண்டிருந்தது அம்மாவுக்குத் தெரியாது. ஒன்பது ரூபாய் சம்பளம் கொடுத்தார்கள். அது ஒன்பது கோடி ரூபா. அம்மா கையிலே அதைக் கொடுத்து நமஸ்காரம் பண்ணணும்னு ஆசை. அவள் கையாலே எண்ணிப் பார்த்தால் சந்தோஷப்படுவாளே, கண்பார்வை போயிடுத்தேங்கிறதே நினைக்கிறப்போ துக்கமாப் போயிடுத்து.

கையிலே கொடுத்தேன். வாங்கிண்டா. ‘ரூபாயாடா? ரூபாயாடான்னு?’ கேட்டா. சம்பாதிச்சேன்னு சொன்னேன். சந்தோஷம் தாங்கலை. ‘சுவாமி கிட்டே வேண்டிக் கொண்டேன். உடனே கொடுத்துட்டாரே’ன்னு மகிழ்ந்து போனாள்.

அம்மாவிடம் கம்பெனி வேலைன்னு சொன்னேன். கம்பெனின்னா டிராமாக் கம்பெனின்னு அவளுக்குத் தெரியாது, இப்படி மூணு மாசம் பணம் கொடுத்தேன். அம்மா உடம்பு அதுக்குள்ளே இற்றுப் போச்சு. படுத்துட்டா. நான் தவிக்கிறேன். அவள் கண்ணுக்கு சிகிச்சை கொடுக்கலைங்கற தாபம் என்னை வாட்டி எடுக்கிறது. அந்த அளவுக்கு எனக்கு இன்னும் வரும்படி வரலையேங்கற தாபம். அம்மா என்னைப் பக்கத்திலே உட்காரச் சொல்லி முகத்தைத் தொட்டுத் தொட்டுப் பார்த்து ஆசையைத் தீர்த்துக்கிறா. எனக்கு அழுகையா வர்றது. ‘அம்மா! நீ மன்னிப்பேன்னு சொன்னா உங்கிட்டே ஒரு உண்மையைச் சொல்றேன்,’ அப்படீங்கறேன். ‘சொல்லு’ என்கிறா.

96

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிள்_பசி.pdf/95&oldid=1029723" இலிருந்து மீள்விக்கப்பட்டது