பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கடமையின் வடிவம் கண்ணகி

கண்ணகி உயர்குடிப் பிறந்த குலமகள். குடும்ப மகளாகத் திகழ்ந்த அந்நல்லாள் காதலை ஒரு பொருட்படுத்தவில்லை போலும்! காதலுக்கும் அவளுக்கும் வெகுதுாரம் எனவே தோன்றுகின்றது. மணவறையில் கண்ணகியை,

காதலாள் பெயர் மன்னும் கண்ணகி - மங்கல, 29.

என்றுதான் கவிஞர் அறிமுகம் செய்கிறார். ஆயின் இது கோவலன் மீதுள்ள காதல் அன்று.

வயங்கிய பெருங்குனத்துக் காதல் -மங்கல, 28-29.

என்று மிக எச்சரிக்கையாகக் கூறுகிறார் கவிஞர். இல்லறத்திற்குரிய இனிய பண்புகளைக் காதலிப்பவள் அவள். தன் தலைவனைக் காதலிப்பது பற்றிய பேச்சு அங்கில்லை. கணவனாக வரித்துக் கொண்டவனைக் காதலிக்க வேண்டிய தேவை இன்றுகூட இல்லையே. எப்படியும் அவன் அவளுடன் வாழ்ந்துதானே ஆகவேண்டும்? இதுதான் மணமுடித்து மனை வாழ்க்கையில் புகுவோரின் இயல்பாகிவிட்டது. குடும்ப வாழ்க்கைக்கு விதித்த தலைவிதி இது போலும்!

மனையறம் தொடங்கித் தனி வாழ்க்கை நடாத்தப் புகும் பொழுதும் காதலைப் பற்றிக் கண்ணகி கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. நெடுநிலை மாடத் திடைநிலத் தேறி மயன் விதித்தன்ன மணிக்கால் அமளிமிசை அமர்ந்தபொழுதாவது அவளுக்கு அவன்பால் காதல் தோன்ற வேண்டுமே? அங்கும் இல்லை. அமளிமிசை அமர்ந்திருக்கும் காதலர்களை,

கயமலர்க் கண்ணியும் காதற் கொழுநனும்
—மனையறம், 11.

என்று புகழ்கின்றார் இளங்கோ. காதற் கொழுநன் என்று கூறிக் காதலைக் கோவலனுக்கு மட்டுமே உரிமையாக்குகின்றார். கயமலர்க் கண்ணி எனக் கூறிக் கண்ணழகைக் கண்ணகிக்கு உரிமையாக்குகின்றார். கண்ணில் மட்டும் அழகு போதுமா? மனத்தில் காதலும் வேண்டுமே?

3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/11&oldid=1426355" இலிருந்து மீள்விக்கப்பட்டது