பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வயங்கிய பெருங் குணத்துக் காதலாள் -மங்கல, 28-9. என்று அவளைக் கவிஞர் அறிமுகம் செய்கிறார் போலும்! கோவலக் காதலாள் அல்லள், குணத்துத் காதலாள் கண்ணகி. இங்ஙனமே சிறையிருந்த சீதையும் இராமன் பிரிவிற்கு வருந்துவதைக் காட்டிலும், விருந்து கண்டபோது என் உறுமோ? வன இல்லறப் பண்பாகிய விருந்தாற்றாமையின் பொருட்டே பெரிதும் விம்மினாள். காதலினும் கடமையே பெரிதெனக் கொண்டு வாழ்ந்தனர் போலும் அக் காலக் குலமகளிர். கண்ணகியும் காதலைப்பற்றிக் கவலைப்படாமல் மனை வாழ்வு, மனையறம், குடும்பக் கடமை இவற்றையே தன் மனத்திற் கொண்டு தூய குலமகளாய்த் திகழ்ந்தாள். இளங்கோவடிகள் காலக் குலமகளிர் நிலைக்குக் கண்ணகி சிறந்த எடுத்துக்காட்டாயினாள். காதலின் வடிவம் மாதவி கண்ணகிக்கு முரணாகப் படைக்கப்பட்டவள் மாதவி. விலைமகள் குலத்து வந்த மாதவி கற்பரசியாய் விளங்கினாள். கற்பரசியாய் மாறினும் விலைமகளிர்க்குரிய கலை உணர்வு அவள் பால் குறைந்த பாடில்லை. ஆடல் பாடல் அழகு மூன்றினும் குறையாத மாதவி தன் தலைவன் கோவலனைத் தன்பால் ஈர்த்துத் தன்னை விட்டு நீங்காதுறையச் செய்யும் காதற் கலையிலும் வல்லவளாய்த் தான் விளங்கினாள். கண்ணகியையும் கோவலனையும் காட்டுங்கால் காதலைக் கோவலனுக்கு உரிமையாக்கிய கவிஞர், இங்கு மாதவியையும் கோவலனையும் காட்டுங்கால் காதலை மாதவிக்கு உரிமையாக்கிக் காட்டுகிறார். கண்ணகியைக் காதலித்த கோவலன் வேறு. ஒர் உருவத்தில் இரு வேறு தலைவர்களைக் காண்கிறோம். தலைவி ஊடல் கொள்ள அவ்வூடலை நீக்கித் தலைவன் அவளுடன் கூடுதலே காதல் மரபு. இங்கோ தலைவன் கோவலன்தான் ஊடுகிறான்.

5
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/13&oldid=1404847" இலிருந்து மீள்விக்கப்பட்டது