பக்கம்:ஆய்வுப் பேழை.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
107


“உரன்என்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்

வரன் என்னும் வைப்பிற்கோர் வித்து”

என்பது திருக்குறள். 'உரன்’ என்பதற்குத் திண்மை, என்று பரிமேலழகரும், ‘அறிவு’ என்று மணக்குடவரும், 'ஒருவழிப்பட்ட சித்தம்’ என்று காலிங்கரும் உரை கூறுவர். எனவே, திண்மையான மன ஒருமைப்பாடுடைய அறிவினாலே ஐம்புலனை அடக்கலாம். இவ்வுரனைத் திருவள்ளுவர் ‘தோட்டி’ என உருவகித்தார். உரனைத் ‘தோட்டி’ என்றவர் ஐம்புலனையும் யானை என்னாமையால், இஃது ஏகதேசஉருவகம் என்று பரிமேலழகரும் கூறியுள்ளார். ஆகவே தோட்டியின் தன்மை யானையை அடக்குவது என்பது விளங்குவதாயிற்று. தோட்டியின் தன்மையே தோட்டிமையாகும்.

தோட்டிமையுடைய தொண்டர்

தொண்டர்கள் பொறிவாயில் ஐந்தவித்தவர் ஆவர். ‘தொண்டர், அஞ்சுகளிறும் அடக்கி’ என்ற இடத்துச் சம்பந்தரும், தொண்டர் ஐந்து புலன்களாகிய களிறுகளே அடக்குவர் என்று கூறியுள்ளார். ஐந்துகளிறுகளையும் அடக்குபவராகிய தொண்டர்களையே திருநாவுக்கரசர் தோட்டிமையுடைய தொண்டர்’ என்றார். எனவே, “ஐம்புலன்களாகிய யானைகளை ‘உரன்’ என்னும் தோட்டியால் அடக்கும் தன்மையுடைய தொண்டர்” என்பது இச்சொற்றோடரின் பொருள் என்க.

ஆகவே, தோட்டிமை வேறு, தொட்டிமை வேறு என்பதும் இதனானே போதரும்.


"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுப்_பேழை.pdf/114&oldid=1388624" இலிருந்து மீள்விக்கப்பட்டது