பக்கம்:ஆய்வுப் பேழை.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
5


ராஜசிம்மன் (கி. பி. 685-705) என்ற பல்லவ அரசன் காலத்தில் பல்லவப் பெருநாட்டில் பஞ்சம் ஒன்று ஏற்பட்டது. பாரவியின் பேரனாகிய தண்டி பஞ்சக்கொடுமையை (அவந்தி சுந்தரி கதாஸாரம் என்ற நூலில்) பின்வருமாறு கூறுகிறார்,

சோழ பாண்டிய நாடுகள் பஞ்சக் கொடுமையால் மிக்க துயருற்றன. பெண்கள் புறக்கணிக்கப்பட்டனர். அக்கினி ஹோத்திரங்கள் நிறுத்தப் பெற்றன. நெற்களஞ்சியங்களில் நெல் இல்லையாயிற்று. வீடுகளிலிருந்து மக்கள் விரட்டப்பட்டனர். பெருமை அழிந்தது. மரங்கள் வெட்டுண்டன. செல்வர் கொலையுண்டனர். கெளசிகியின் மகனாகிய தண்டியின் உற்றார் உறவினர் சிலர் மாண்டனர். சிலர் நீங்கினர். தண்டியும் வாழ வழியின்றிக் கையில் பணமுமின்றி நாடெங்கும் சுற்றி அலேயலானான். பஞ்சம் நீங்கியபிறகு காஞ்சிக்கு வந்தான். அவந்திசுந்தரி கதை நூலை எழுதினான்.

பஞ்சத்தினால் சீரழிந்த கடிகையை ராஜசிம்மன் மீண்டும் நன்னிலையடையச் செய்தான். இதனையே வேலூர்ப்பாளையப் பட்டயம், “நரஸிம்ஹவர்மா புநர் வ்யாதாத்யோ கடிகாம் த்விஜா நாம்” என்று கூறுகிறது. (இதில் நரசிம்மவர்மன் என்றது ராஜசிம்மனேயே ஆகும்.)

இங்ங்ணம் சீர்செய்யப் பெற்றதும் கடிகை மீண்டும் நன்கு நடைபெறலாயிற்று. ஏறத்தாழ 705-இல் ராஜசிம்மன் இறந் தான். அவன் மகன் இரண்டாம் பரமேசுவரன் 710 வரை ஆட்சி செய்து அவனும் இறந்தான். அவனுக்கு அடுத்துப் பல்லவப் பேரரசை ஏற்று நடத்தத் தக்க அரசன் இல்லை. அப்பொழுது கடிகையாரும் பிறரும் இரண்யவர்ம மகாராஜன் என்பவனைக் கண்டு தமக்கோர் அரசனைக் கேட்டு, அவன் மகனையே (பல்லவமன்னாகிய நந்திவர்மனை) அரசனாகப் பெற்றனர். அந்நாளில் இக்கடிகையாருள் ஒருவர் தரணி கொண்ட போசர் எனப் பெற்றார். இவரை ‘வித்தாகமிகர்’ அதாவது ஆகமங்களில் சிறந்த அறிவு படைத்தவரென்று கூறுவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுப்_பேழை.pdf/12&oldid=980697" இலிருந்து மீள்விக்கப்பட்டது